தமிழர்கள் அதிக ஊதியம் கேட்கிறார்கள்… குறைவான நேரமே வேலை செய்கிறார்கள்..! காஞ்சிபுரம் கலெக்டரின் சர்ச்சை பேச்சு
காஞ்சிபுரம் , செங்கல்பட்டு , சென்னை , திருச்சி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் வட மாநில தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் செய்வதன் காரணமாக வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வட மாநில தொழிலாளர் ஆதரவாக குரல் கொடுத்து வருவது காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்திலுள்ள தொழிலாளர்கள் அதிக ஊதியம் கேட்பதுடன் குறைவான நேரம் மட்டுமே வேலை செய்வதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார். மாவட்ட ஆட்சியாளராக பணி புரிந்து கொண்டு மக்களின் நலனுக்காகவும் , வாழ்வாதாரத்திற்காகவும் வழிவகை செய்யாமல் தனியார் மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரியை போன்று பேசியிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழிற்சாலைகளைக் கொண்ட மாவட்டங்களில் காஞ்சிபுரம் மாவட்டமும் ஒன்றாகும். சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவிலான நிறுவனங்கள் , தொழிற்சாலைகள் அமைந்திருக்கின்றன. அப்பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நிலையில் வேலை வாய்ப்பு வழங்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. ஆந்திரா , கர்நாடகா , ஆகிய மாநிலங்களில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு 80% சதவிகிதம் வரை உள்ளூர் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென சட்டம் இயற்றி அந்த மாநில அரசு அதனை செயல்படுத்தியும் வருகின்றன.
தமிழகத்தில் அப்படிப்பட்ட சட்டம் இதுவரை அமல்படுத்தாத நிலையில் குறைந்தபட்சமாத சொந்த மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமையாவது வழங்க வேண்டும். காஞ்சிபுரம் மற்றும் பிற மாவட்டங்களிலும் உள்ளூர் பணியாளர்களை நிராகரித்து விட்டு வடமாநில தொழிலாளர்களை அதிக அளவில் பணியமர்த்தப்பட்டு வருவது வழக்கமாகி உள்ளது. வடமாநில தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் அதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் பதவியிலுள்ள அதிகாரிகள் நியாயப்படுத்துவதும் எதன் அடிப்படையில் சரியாக இருக்கும் என்பதாக கேள்வி எழுந்துள்ளது.
மக்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய அதிகாரிகளே தனியார் நிறுவனங்களுக்கு ஆள் சேர்க்கும் புரோக்கர் போல செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஆந்திராவில் பிற மாநிலத்தவர்களுக்கு வேலை மறுக்கப்படுவதால் கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள ஸ்ரீ சிட்டி பகுதியிலுள்ள தொழிற்சாலைகளில் கூட தமிழர்களுக்கு வேலை வழங்கப்படாமல் வாழ்வாதாரத்திற்கே வழியில்லை எனும் போது என்ன செய்வதென தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர் உள்ளூர் தொழிலாளர்கள் !
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் 75% சதவிகிதம் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கே வழங்க சட்டம் கொண்டுவரப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது ஆனால் தற்போது வரை தமிழக அரசு இதுவரை சட்டம் கொண்டு வரவில்லை. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் சட்டம் கொண்டு வந்திருந்தால் இது போன்ற வேலை வாய்ப்பின்மை பிரச்சனைகள் ஏற்பட்டிருக்காது. தமிழக அரசின் அலட்சியமும் , செயல்பாடில்லாத நிர்வாகமும் அரசு உயர் பதவியில் உள்ள அதிகாரிகளை மக்களுக்கு எதிராகவும் , தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட தூண்டுகிறது.
தமிழகத்திலுள்ள தொழிற்சாலைகளில் வேலை வழங்குவதில் தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா ? அல்லது வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமா என்பதை தமிழகம் விரைவாக தெளிவுபடுத்த வேண்டும். சொந்த மாநில மக்களுக்கு முன்னுரிமை அளிப்பதே தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்க வேண்டுமே தவிர அதற்கு மாறாக இருக்க கூடாது.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தும் , தனியார் நிறுவன முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் மீது நடவடிக்கை எடுப்பதோடு தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் தமிழக தொழிலாளர்களுக்கு 75% சதவிகித வேலை வாய்ப்புகளை வழங்கிட சட்டம் இயற்றிட வேண்டும். தமிழக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு பிரச்சனை நிகழ்ந்தால் தமிழ்த்தாய் கட்சி சார்பில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என்பதாக அக்கட்சியின் நிறுவனத்தலைவர் முனைவர் வீ.மு.சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.