பல்லடத்தில் மரத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சமூக ஆர்வலர்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல்நிலையம் எதிரே கடந்த 6.10.2023 அன்று இரவு சுமார் 9 மணி அளவில் மின்சார கட்டரை கொண்டு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று 30 ஆண்டு பழமையான மரத்தை அடியோடு வெட்டி எடுத்து ஆட்டோவில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மரம் வெட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு பல்லடம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் சம்பவம் குறித்து வட்டாட்சியருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய்துறையினர் வெட்டப்பட்ட மரத்தை கைப்பற்றி வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டு அதிர்ச்சி அடைந்த சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் அண்ணாதுரை தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் மரம் வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்துறையிடம் மனு அளிக்கப்பட்டது.