விஜய் சேதுபதியின் வளர்ச்சிக்குத் தடையான சீமான்..! “800” திரைவிமர்சனம்
மூவி டிரைன் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், எம்.எஸ். ஶ்ரீபதி இயக்கத்தில், மிதுர் மிட்டல், மகிமா நம்பியார், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “800”.
கதைப்படி… இலங்கை மலைப்பகுதியில் உள்ள காப்பி தோட்டத்தில் வேலை பார்க்கும் இந்திய தமிழர் குடும்பத்தில் பிறந்த முரளிதரன் ( மிதுர் மிட்டல் ), கிருஸ்தவ உண்டு உறைவிடப் பள்ளியில் படிக்கிறார். முரளிதரனுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருந்ததால் பள்ளியில் அவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பள்ளியில் விளையாடும்போது போது சிறந்த சுழற்பந்து வீரராக உருவெடுக்கிறார். பின்னர் கல்லூரி அணிகளிலும் தனது திறமையை நிரூபித்து, பல்வேறு போதனைகளை கடந்து இலங்கை கிரிக்கெட் அணியில் நுழைகிறார்.
பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாட முதல்முறையாக வெளிநாட்டிற்கு செல்கிறார். அங்கு அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்காததால் மனதளவில் சோர்வடைகிறார். அதன்பிறகு ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடும் போது இவரது கை வளைந்து இருப்பதாகவும், பந்தை எறிகிறார் என்கிற குற்றச்சாட்டு இவர்மீது சுமத்தப்படுகிறது.
பின்னர் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து மீண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் எடுத்து எவ்வாறு சாதனை படைத்தார் என்பது மீதிக்கதை….
முரளிதரன் கதாபாத்திரத்தில் மிதுர் மிட்டல் சிறப்பாக நடித்திருக்கிறார் என்பதைவிட முரளிதரனாகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். இவரது பந்துவீச்சு அச்சு அசலாக பார்வையாளர்களுக்கு முரளிதரனை ஞாபகப்படுத்துகிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்திக்கும் போது, போரில் பாதிக்கப்படும் இருதரப்பு அப்பாவி மக்கள் மீது வருத்தமும், தமிழ் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்கிற அக்கறையும் முரளிதரனின் ஆழ்மனதில் இருந்ததை இயக்குனர் அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் போது எந்தவித சர்ச்சைக்கு ஆளாகாத வண்ணம் சிறப்பாக திரைக்கதையை அமைத்து, சுவாரஸ்யமாக ரசிக்கும்படியாக படமாக்கிய இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்தப் படத்தில் தமிழ் திரையுலக நட்சத்திரமான நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக பேசப்பட்டு, சீமான் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த வாய்ப்பு மிதுர் மிட்டலுக்கு கிடைத்திருக்கிறது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தால் சர்வதேச அளவில் அவரது நடிப்பு பேசப்பட்டு ஜொலித்திருப்பார். விஜய் சேதுபதியின் வளர்ச்சிக்கு சீமான் தடையாக இருந்திருக்கிறார் என்பதை இப்படம் உணர்த்துகிறது.