காலத்திற்கேற்ப அனைவரையும் யோசிக்க வைத்த கதை ! “வெப்பம் குளிர் மழை” – விமர்சனம்
ஹேஸ்டேக் FDFS புரொடக்சன்ஸ் சார்பில் திரவ் தயாரிப்பில், பாஸ்கல் வேதமுத்து இயக்கத்தில், எம்.எஸ் பாஸ்கர், திரவ், இஸ்மத் பாணு, ரமா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “வெப்பம் குளிர் மழை”.
கதைப்படி… சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவிடுதிக்கோட்டை கிராமத்தில் வசித்துவரும் பெத்த பெருமாள் ( திரவ் ), பாண்டி ( இஸ்மத் பாணு ) தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லை என்பதால் கோவில் கோவிலாக குடும்பத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வேண்டி வருகிறார்கள். கோவில் திருவிழாவில் வருடந்தோறும் பெத்த பெருமாள் குடும்பத்திற்கு கொடுக்கப்படும் முதல் மரியாதையை வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு கொடுக்க வேண்டும் என ஊர் கூட்டத்தில் பேசி முடிக்கின்றனர். அப்போது அங்கு ஏற்படும் தகராறில், குழந்தை பெற்றுக்கொள்ள வக்கில்லாவன் என பெத்த பெருமாளை கேட்க அவமானத்தில் வீடு திரும்புகிறார் பெத்த பெருமாள். இந்நிலையில் வீட்டிலும், உறவினர்களும் பாண்டியை மலடி என கேலியும், கிண்டலும் பேசுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க அவரது அக்கா தனது மகளை தம்பிக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறார். அவரது அம்மாவும் வற்புறுத்துகிறார். அந்தப் பெண்ணுக்கும் எனக்கும் 15 வயது வித்தியாசம் எப்படிமா என பெத்த பெருமாள் மறுக்கிறார். பின்னர் கனவனை கட்டாயப்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருவரும் பரிசோதனை செய்கின்றனர். கனவருக்கு குறை இருப்பது தெரிந்தும், கனவர் மனதை கஷ்டப்படக் கூடாது என வெளிப்படுத்தாமல், கனவருக்குத் தெரியாமல் மருத்துவரின் உதவியுடன் IVF முறையில் குழந்தை பெற்றுக் கொள்கிறார் பாண்டி.
அதன்பிறகு என்ன நடந்தது என்பது மீதிக்கதை…
திருமணமான தம்பதியர் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை என்றால், பெண்ணின் மீது பழி சுமத்தி மலடி என பட்டம் தீட்டும் பழக்கம் இன்னும் மாறவில்லை என்பதை அற்புதமாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர். நாயகன் திரவ், நாயகி இஸ்மத் பாணு இருவரும், பெத்த பெருமாள், பாண்டி கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். எம் எஸ் பாஸ்கர், ரமா ஆகிய இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ரசாயனம் கலந்த உணவு பழக்கத்தால் உயிரணுக்கள் உருவாகாது என பேச்சுவாக்கில் எம்எஸ் பாஸ்கர் பேசும் வசனம் யோசிக்க வேண்டிய விஷயம் தான்..