இந்த யோகம் எல்லோருக்கும் கிடைக்குமா ? “எனக்கு END யே கிடையாது” திரைவிமர்சனம்
ஹங்கிரி ஓல்ப் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் ரமேஷ், இயக்கி நடித்துள்ள படம் “எனக்கு END யே கிடையாது”.
கதைப்படி… சென்னையில் வாடகைக்கார் ஓட்டுநராக இருக்கும் விக்ரம் ரமேஷ், இரவு நேரத்தில் ஒரு மதுபான விடுதியிலிருந்து ஸ்வயம் சித்தாவை அவரது வீட்டில் விடுவதற்காக ஏற்றிக்கொண்டு செல்கிறார். வீடு வந்ததும் தன்னோடு குடிப்பதற்கு கம்பெனி கொடுக்குமாறு விக்ரமேஷை அழைக்க, கரும்பு தின்ன கூலியா என்பதுபோல் அவரும் செல்கிறார். இருவரும் நன்றாக குடித்து மயங்குகிறார்கள். பின்னர் போதை தெளிந்து கிளம்பலாம் என நினைத்து, ஸ்வயம் சித்தாவை தேடும்போது… ஓர் அறையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியேற நினைத்து ஓடிவரும் போது, ஸ்வயம் சித்தாவுக்கும் விக்ரம் ரமேஷிற்கும் இடையே நடைபெறும் கைகளப்பில் , ஸ்வயம் சித்தா கீழை விழுந்து இறந்து போகிறார்.
பின்னர் வீட்டைவிட்டு வெளியேற நினைக்கும்போது, திருடன் ஒருவன் முகமூடியுடன் உள்ளே நுழைகிறான். அப்போது விக்ரம் ரமேஷ் ஓர் அறையில் பதுங்குகிறார். திருடன் உள்ளே நுழைந்து அவனது வேலை முடிந்து வெளியே செல்ல நினைக்கும் நேரத்தில், அரசியல்வாதி ஒருவர் உள்ளே வருகிறார். அவரைப் பார்த்ததும் மற்றொரு அறையில் திருடன் பதுங்குகிறான். அதன்பிறகு மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு, பின்னர் சமாதானம் ஆகிறார்கள்.
இவர்கள் மூவரும் வீட்டைவிட்டு வெளியேறினார்களா ? இல்லையா ?, வீட்டிற்குள் இறந்து கிடப்பவரை யார் கொலை செய்தது ? என்பது மீதிக்கதை…
படத்தின் முழு கதையையும் ஒரே வீட்டில் நடப்பது போல், ரசிக்கும்படியான வசனங்களுடன், திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் விக்ரம் ரமேஷ். இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் போல் ஒரே இடத்தில் முழுக் கதைகளத்தையும் அமைத்து, பார்வையாளர்களை சலிப்படையாமல் படம் பார்க்க வைத்த இயக்குனரை பாராட்டாமல் இருக்க முடியாது.
கதாப்பாத்திரத்தின் பெயர்களை இந்து, இஸ்லாம், கிருஸ்தவம் என மூன்று மதத்தினரின் பெயர்களை வைத்து மத நல்லிணக்கத்தை உணர்த்தியுள்ளார்.
படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், படத்தில் நடித்துள்ள அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பை பாராட்டாமல் இருக்க முடியாது.