சந்திரமுகி -2 மூலம் ரஜினியின் சந்திரமுகி-க்கு கலங்கமா ?.!
லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, ரவி மரியா, விக்னேஷ், மகிமா நம்பியார், லெட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், பி. வாசு இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சந்திரமுகி-2”.
கதைப்படி… கோடீஸ்வரி ரங்கநாயகி ( ராதிகா ) குடும்பத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றதால், ஜோதிடரின் ஆலோசனைப்படி குலதெய்ய கோவிலில் விளக்கேற்றி பூஜை செய்வதாக கிராமத்திற்கு வருகின்றனர். இவர்களுடன் வேற்று மதத்தினரை காதலித்து திருமணம் செய்ததால் இவர்கள் குடும்பத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட மகளின் குழந்தைகளும் கலந்து கொள்கின்றனர். அந்தக் குழந்தைகளின் பாதுகாவலரான பாண்டியனும் ( ராகவா லாரன்ஸ் ) இணைந்து கொள்கிறார்.
அந்த கிராமத்தில் உள்ள பங்களாவில் தங்குவதற்காக, அதன் உரிமையாளர் முருகேசனிடம் ( வடிவேலு ) பேசி தங்குகிறார்கள். அவர் பங்களாவில் உள்ள தெற்குப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனக்கூறி பிற பகுதிகளில் அனைவரையும் தங்க வைக்கிறார். மறுநாள் குலதெய்வ கோவிலுக்கு செல்கின்றனர், அதே சமயத்தில் வீட்டின் தெற்குப் பகுதியில் ஏதோ சப்தம் கேட்க, அனைவரும் பயந்து நடுங்க ரங்கநாயகியின் மகள் லட்சுமி மேனன் அப்பகுதிக்கு செல்கிறார்.
இதேபோல் ஒவ்வொரு முறையும் கோவிலில் பூஜை செய்ய முற்படும் போதெல்லாம் ஏதோ ஒரு சக்தி தடையை ஏற்படுத்தி இவர்களின் முயற்சியைத் தடுக்கிறது.
ரங்கநாயகியின் குடும்பத்தினர் குலதெய்வ கோவிலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தார்களா? இல்லையா ?, சந்திரமுகி யார் ? இவர்கள் குடும்பத்தை ஏன் பூஜை செய்யவிடாமல் தடுக்கிறது என்பது மீதிக்கதை…
ரஜினி நடித்த சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அதே பெயரில் பார்ட் -2 என பெயர் வைத்தால், வெற்றி பெறும் என்ற கனவோடு இயக்குனர் பி. வாசு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரஜினியை வைத்து மாபெரும் சாதனை படைத்த இயக்குனர், பார்ட் -2 என பெயர் வைக்காமல் இருந்திருந்தால் பழைய புகழை வைத்தே நாட்களைக் கடத்திய இருக்கலாம். லாரன்ஸுக்கு என கதை எழுதி, அதற்கென புதிய பெயர் சூட்டியிருக்கலாம், சந்திரமுகி என பெயர் வைத்து பழைய சந்திரமுகி பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தியது போல் ஆகிவிட்டது சந்திரமுகி -2. இயக்குனர் பி. வாசு திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தனக்கென தனி மேனரிசத்தை கடைப்பிடிக்காமல், படம் முழுவதும் ரஜினியின் மேனரிசத்தை கடைபிடித்துள்ளார். லாரன்ஸை ரஜினியாக பார்க்க சகிக்கவில்லை என்றே கூறலாம்.
வைகைப்புயல் வடிவேலுக்கு மாமன்னன் படத்தின் மூலம் கிடைத்த புகழ், இந்தப் படத்தின் மூலம் சரிவை சந்திப்பாரோ என நினைக்கும் அளவுக்கு நடித்திருக்கிறார். அவர் என்ன செய்வார், இயக்குனர் அவரை நன்றாக பயன்படுத்தியிருக்கலாம்.
கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நன்றாக நடித்திருந்தாலும், ஜோதிகாவின் இடத்தை நிரப்ப வில்லை. ரவி மரியா, லெட்சுமி மேனன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகளைப் பாராட்டியே ஆகவேண்டும்.