ஏதோவொரு நிறுத்தத்தில் சத்தமில்லாமல் ஒரே ஒரு முத்தம் கிடைத்ததா ?.! “சத்தமின்றி முத்தம் தா” விமர்சனம்
செலிபிரைட் நிறுவனம் சார்பில் எஸ். கார்த்திகேயன் தயாரிப்பில், ராஜ் தேவ் இயக்கத்தில், ஶ்ரீகாந்த், பிரியங்கா திம்மேஷ், ஹரிஸ் பெராடி, வியான், நிஹாரிகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “சத்தமின்றி முத்தம் தா”.
கதைப்படி… ஒரு பங்களாவில் முகமூடி அணிந்த நபர் நாயகி சந்தியாவை ( பிரியங்கா திம்மேஷ் ) கொலை செய்ய துரத்துகிறார். அவரிடமிருந்து தப்பித்து வெளியே வந்து தெருவில் ஓடுகிறார். அப்போது அவர்மீது கார் மோதி ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடக்கிறார் சந்தியா. அந்த சமயத்தில் விக்னேஷ் (ஶ்ரீகாந்த் ) சந்தியாவை காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். சந்தியா உயிர் பிழைத்தாலும் சுயநினைவை இழக்கிறார். சந்தியாவின் கனவராக விக்னேஷ் அவர் வீட்டிற்கு அழைத்துச்சென்று அவருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்கிறார்.
ஒரு கும்பல் விக்னேஷை கொலை செய்ய வீட்டிற்கு வருகிறார்கள். சந்தியாவை அங்கு பார்த்ததும் அவரை கொலை செய்ய முற்படுகையில், விக்னேஷ் அவர்கள்மீது தாக்குதல் நடத்தி இருவரையும் கொலைசெய்து புதைத்து விடுகிறார். விக்னேஷின் செயல்பாடுகளை பார்த்ததும் சந்தியாவிற்கு சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் நகரில் பல மர்மமான கொலைகள் நடைபெறுகிறது. எந்தவித ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.
சந்தியாவின் கனவர் யார் ? அவரை ஏன் மர்மநபர்கள் கொலை செய்ய துரத்துகிறார்கள் ? விக்னேஷிற்கும், சந்திவிற்கும் என்ன உறவு என்பது மீதிக்கதை…
க்ரைம், த்ரில்லர் ஜானரில் கதையை யோசித்த இயக்குநர், திரைக்கதையில் கவணம் செலுத்த தவறிவிட்டார் என்றே சொல்லலாம். ஶ்ரீகாந்த் படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது, அவருக்கு ரீ எண்ட்ரி படமாக இருக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்கு சென்றால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.