குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், பணத்திற்காக அலையும் ஐடி தம்பதியர். “சாட் பூட் த்ரி” திரைவிமர்சனம்
யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் அருணாச்சலம் வைத்தியநாதன் தயாரித்து இயக்க, வெங்கட் பிரபு, சினேகா, யோகி பாபு, சிறுவர்கள் கைலாஷ், வேதாந்த், பூவையார், ப்ரணிதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் “சாட் பூட் த்ரி”.
கதைப்படி… ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் வெங்கட் பிரபு, சினேகா தம்பதியர் மகன் கைலாஷுடன் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். பெற்றோர் குழந்தையை கவணிக்க கூட நேரமில்லாமல் எந்நேரமும் வேலையில் பிசியாக இருப்பதால் கைலாஷ் பேச்சுத் துணைக்குக்கூட ஆள் இல்லாமல் தனிமையில் தவிக்கிறான். ஆகையால் தனக்கு ஒரு தம்பி பாப்பா வேண்டும் என தாய் தந்தையிடம் கேட்க சினேகா மறுப்பு தெரிவிக்கிறார். அதன்பிறகு ஒரு நாய் வளர்க்க ஆசைப்படுகிறான். அதற்கும் அவனது தாய் மறுப்பு தெரிவிக்கிறார். அதையும் மீறி நண்பர்களின் துணையோடு ஒரு நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வருகிறான். முதலில் வீட்டில் நாய் வளர்க்க கூடாது என மறுப்பு தெரிவித்த சினேகா பின்னர் வெங்கட் பிரபு, கைலாஷ் இருவரும் அடம் பிடித்ததால் சம்மதிக்கிறார்.
கைலாஷ் வாழ்க்கையில் அந்த நாய் வந்தபின் அவனது சகோதரன் போல் உணர்கிறான். பின்னர் எந்நேரமும் நண்பர்கள், நாய் சகிதம் காலங்கள் நகர்கிறது. ஒருநாள் கைலாஷின் பெற்றோர் வெளியூர் சென்றதால், தனது நண்பர்கள் பல்லவி, பல்லு இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து விளையாடுகிறார்கள். அப்போது எதிர்பாராத விதமாக நாய் காணாமல் போகிறது. நாயை காணவில்லை எனத் தெரிந்ததும் மூவரும் அதிர்ச்சியாகி நாயை தேடி அலைகிறார்கள். இவர்களுடன் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் வேலை பார்க்கும் ரமணாவும் இணைந்து கொள்கிறான்.
பின்னர் காணாமல் போன நாயை கண்டு பிடித்தார்களா ? பெரியவர்களின் துணை இல்லாமல் நாயைத் தேடி அலையும் சிறுவர்கள் ஏதாவது ஆபத்தில் சிக்கினார்களா ? அப்போது அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் என்ன என்பது மீதிக்கதை…
ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் தம்பதியராக வெங்கட் பிரபு, சினேகா இருவரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். கதையின் நாயகர்களான சிறுவர்கள் நான்குபேரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இயந்திரமயமான இந்த காலகட்டத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடாமல், அவர்களின் எண்ணங்களையும், விருப்பங்களையும் தெரிந்து கொள்ளாமல் எந்நேரமும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் அலையும் பெற்றோருக்கு இந்தப் படம் ஒரு பாடமாக அமையும் என்றே சொல்லலாம்.