ஓரினச் சேர்க்கையை இஸ்லாம் அங்கீகரிக்கிறதா ?.! “வாழ்வு தொடங்குமிடம் நீதானே” விமர்சனம்
அதிதி இசை, அத்வைதா இசை ஆகியோர் தயாரிப்பில், ஜெயராஜ் பழனி இயக்கத்தில், சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத், பெராஸ், ஆறுமுகவேல், ஆர்.ஜே. பிரதீப் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடிப்பில் ஷாட் ஃப்லிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள படம் “வாழ்வு தொடங்குமிடம் நீதானே”.
கதைப்படி… தரங்கம்பாடியில் உள்ள இஸ்லாமிய பெண் ஷகிரா. அந்த ஊருக்கு டாக்குமெண்டரி படம் எடுப்பதற்காக திருச்சியிலிருந்து வருகைதரும் வினோதா என்கிற பெண் ஷகிரா வீட்டில் தங்குகிறார். அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு பெண்களும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படுகின்றனர். இந்த விஷயம் அவரது தந்தைக்கு தெரியவர இருவரையும் கண்டித்து வினோதாவை வீட்டைவிட்டு விரட்டி விடுகிறார்.
இந்நிலையில் மகள் ஷகிராவிற்கு அவசர அவசரமாக இர்பான் என்கிற இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறார். இர்பான் பள்ளிக் காலத்திலிருந்து ஷகிராவை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததால் அவரைக் காண்பதற்காக எண்ணற்ற கணவுகளுடன் ஷகிராவை சந்திக்கிறார். ஷகிரா இர்பானிடம் தன்னை வினோதாவிடம் சேர்த்து வைக்குமாறு உதவி கேட்க, நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதிக்கிறார்.
இர்பான் ஏற்றுக்கொண்டாலும் சமூகமும், இஸ்லாமிய ஜமாத்தும் ஏற்றுக்கொண்டதா என்பது மீதிக்கதை….
ஓரினச் சேர்க்கையாளர்களாக நடித்துள்ள சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார் ஆகிய இருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பெரும்பாலும் இதுபோன்ற குதற்கமான கதையம்சம் கொண்ட படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச காட்சிகள் நிறைந்திருக்கும். ஆனால் இந்தப் படத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை எதார்த்தமாக ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ஓரினச் சேர்க்கையாளர்களின் விருப்பப்படி அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இந்த சமூகத்தில் அவர்களையும் வாழவிடுங்கள்.
காதலுக்கு ஜாதி, மத வேறுபாடுகள் மட்டும் தடையல்ல, பாலின வேறுபாடும் இல்லை என்கிறது “வாழ்வு தொடங்குமிடம் நீதானே” திரைப்படம்.