பிஜேபி நிர்வாகி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமான முறையில் கொலை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து கள்ளங்கிணறு பகுதியில் மோகன்ராஜ் (49) செந்தில்குமார் (47), புஷ்பாவதி (67) மற்றும் ரத்தினம்மாள் (58) ஆகிய நான்கு பேரும் வசித்து வந்தனர். இந்நிலையில் இரவு நான்கு பேரையும் மூன்று பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இதில் புஷ்பலதாவின் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டும் மற்றவர்கள் கொடூரமாக வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து கொலை சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து சம்பவ இடத்தில் பொதுமக்களும் உறவினர்களும் குவிந்தனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பிஜேபி கட்சியின் கள்ளங்கிணறு பகுதியின் நிரவாகி ஆவார். இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து வந்த பல்லடம் காவல்துறையினர் கொலையான 4 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே பல்லடம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள இயலாது என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து பிஜேபி கட்சியினர் மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு மண்டல ஐஜி பவானீஷ்வரி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
பின்னர் மருத்துவர்களிடம் ஐஜி ஆலோசனை மேற்கொண்டபோது அரசு மருத்துவமனையில் பல மாதங்களாக பிரேத கிடங்கில் குளிர்சாதன பெட்டி இயங்காததால் பிரேத பரிசோதனை செய்ய இயலவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் தனியாரிடம் இருந்து குளிர்சாதன பெட்டி எடுத்துவரப்பட்டு 4 பேரின் உடல்கள் அதில் வைக்கப்பட்டன.
இதனிடையேகொடூரமாக கொலை செய்து தப்பி ஓடிய மூன்று பேரை அடையாளம் காணும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.