கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்திருந்தார். அப்போது இதுவரை எந்த பிரதமரும் சந்திக்காத எதிர்ப்பை அவர் சந்தித்தார். அவருக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளும், விவசாயிகள், திரை உலகம், பொதுமக்கள் என அனைவருமே கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காண்பிக்கப்பட்டது, சமூக வலை தளங்களில் கோ பேக் மோடி என்ற ஹேஷ் டேக் உலக அளவில் முதலிடத்தை பெற்றது. இப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பை இதுவரை எந்த இந்திய பிரதமரும் எந்த மாநிலத்திலும் சந்தித்தது இல்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து இப்படி ஒரு எதிர்ப்பை பிரதமர் சந்தித்தார்.
அதன்பிறகு இப்போது மீண்டும் தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவுக்கும், பாஜக பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு வந்த மோடிக்கு மீண்டும் கருப்பு கொடி எதிர்கட்சிகள் சார்பில் காட்டப்பட்டது. அதோடு மீண்டும் கோ பேக் மோடி என்ற கோஷம் சமூக வலை தளங்களில் படு வேகமாக டிரென்ட் ஆகி வந்தது. ஆனால் அதற்கு முன்னதாக பாஜகவினரால் வெல்கம் மோடி என்ற ஹேஷ் டேக் பரப்பப் பட்டு வந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஹேஷ் டேக் அப்போது டிரென்ட் ஆனது.
தமிழகத்தின் நலனுக்காக தமிழக மாணவர்களின் நலனுக்காக ஒரு திட்டத்தை துவக்கி வைக்க வரும் ஒரு நாட்டின் பிரதமருக்கு இவ்வாறு கருப்பு கொடி காட்டுவதுவும் கோ பேக் மோடி என்று ஹேஷ் டேக் இட்டு அதை சமூக வலை தளங்களில் பரப்புவதுவும் சரியா என்ற கேள்வி எழுகிற நிலையில் கருப்பு கொடி காட்டி வரும் ம.தி.மு.க துணைப் பொது செயலாளர் மல்லை சத்யாவிடம் கேட்டபோது தமிழகத்திற்கு வந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அடுத்த வாரம் தமிழகத்திற்கு வரவுள்ள பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தை மதுரையில் இருந்து துவங்குவார் என்றார். ஆக இங்கு அவர் வந்திருப்பது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தான் அதற்கு எய்ம்ஸ் என்ற முகமூடியை அணிந்து வந்திருக்கிறார்.
அதோடு எய்ம்ஸ் மருத்துவமனை நீண்ட நெடுங்காலமாக இருந்து வரும் கோரிக்கை இப்போது நீதிமன்றம் தலையிட்டு இருப்பதால் வேறு வழியின்றி அதற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள். ஆகவே பிரதமர் மோடி தமிழகத்தின் நலனுக்காக வருகிறார் என்பது அபத்தம். டெல்டா மாவட்டங்கள் மொத்தமாக வாழ்வாதாரத்தை இழந்து நின்றபோது ஆறுதலாக கூட ஒரு வார்த்தை தெரிவிக்காத மோடிக்கு நாங்கள் ஜனநாயகம் அனுமதித்த வழியில்தான் எங்களது எதிர்ப்பை தெரிவிக்கின்றோம். மீத்தேன் ஷேல் கேஸ், நீட் என்று அனைத்து விஷயங்களிலும் தமிகத்திற்கு எதிரான மன நிலையை கொண்டவருக்கு கருப்பு கொடி காட்டுவது என்ன தவறு என்கிறார் மல்லை சத்யா.
இது குறித்து பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ் ஆர் சேகரிடம் கேட்டபோது தமிழகத்திற்கு ஒரு நலத் திட்டத்தை துவக்கி வைக்க வருகை தந்த பிரதமருக்கு இவர்கள் கருப்பு கொடி காட்டுகிறார்கள் என்றால் தமிழன விரோதி யார் என்பது தெரியும் என்றவரிடம் புயலுக்கு ஆறுதல் கூறவில்லையே என்று கேட்டபோது புயல் தாக்கிய அடுத்த சிலமணி நேரங்களிலேயே டிவிட்டரில் தமிழக மக்களுக்கு துணையாக நான் நிற்பேன் என்று கூறியதோடு மத்திய அமைச்சரை இங்கு அனுப்பி வைத்தார் என்று கூறினார் அதோடு சுஷ்மா சுவராஜ் கூறியதாக பிரச்சாரத்தை துவக்கி வைக்க வந்தார் என்றால் இன்றைய நிகழ்ச்சியில் அரசியலே அவர் பேசவில்லை என்பதிலிருந்தே எதிர்கட்சிகள் பொய்யை மட்டுமே கூறுகின்றன என்பது தெளிவாகிறது என்று கூறினார் சேகர்.