பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு காலத்தின் கட்டாயம்..! ஏன்..?
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பத்திரிகையாளர்களை அவமதிக்கும் விதமாக பேசி வருகிறார். அண்ணாமலையின் செயல்பாடு தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களாக பதவி வகித்த எல்.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் போன்றோர் பதவி வகித்த காலத்தில் அண்ணாமலை போன்று எந்தத் தலைவர்களும் பத்திரிகையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதில்லை. ஆனால் அண்ணாமலை பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைமையின் கவனத்தைப் பெறுவதற்காக தமிழகத்தில் தேவையில்லாத விஷயங்களைப் பேசி வருகிறார்.
கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் உளவுத்துறைக்கு தகவல் வருவதற்கு முன் உங்களுக்கு எப்படி தகவல் தெரிந்தது என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது அண்ணாமலை கோபமடைந்து பத்திரிகையாளர்களை குரங்கு என விமர்சனம் செய்துள்ளார். இதனால் தமிழகம் முழுவதும் அண்ணாமலை பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் வரை அண்ணாமலையை செய்தியாளர்கள் புறக்கணிக்க வேண்டும். அவர் பேசும்போது அந்த இடத்திலேயே எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என பல்வேறு சங்கங்களின் சார்பில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
இதுசம்பந்தமாக மூத்தபத்திரிகையாளர் நம்மிடம் பேசுகையில், பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் அனுமதிக்க மாட்டார்கள். இதில் பருவஇதழ்கள், சமூக ஊடகங்கள் சுதந்திரமாக அவர்களது எதிர்ப்பை தெரிவிக்க முடியும். ஆனாலும் பெரும்பாலான பத்திரிகையாளர்கள் பல்வேறு சங்கங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் இருந்து வருகிறார்கள்.
ஆகையால் அனைத்து தரப்பு ஊடகங்களிலும் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு என்பது காலத்தின் கட்டாயம். கூட்டமைப்பு மூலம் அண்ணாமலை போன்றோரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தால் பத்திரிகையாளர்கள் அவமதிப்பை தடுத்து நிறுத்தலாம். மற்றபடி அவதூறு நடக்கும்போது தர்ணா செய்வதோ எதிர்ப்பு தெரிவிப்பதையோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனுமதிக்காது. கூட்டமைப்பின் மூலம் வழக்கு தொடர்ந்து பாடம் கற்பித்தால் மட்டுமே இதுபோன்ற அவதூறுகளை தவிர்க்கலாம்.
இதற்கு முன் தமிழகத்தில் தலைவர்கள் அண்ணாமலை போல் யாரும் அநாகரீகமாக பேசியது கிடையாது. தனிப்பட்ட முறையில் பத்திரிகையாளர்களை பிடிக்காதவர்கள் கூட இவ்வாறு நடந்து கொண்டதில்லை. ஜெயலலிதாவிற்கே பத்திரிகையாளர்களை பிடிக்காது. ஆனால் அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்து விடுவார். ஆனால் கலைஞர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர்ந்து நடத்துவார். அவருக்கும் சில பத்திரிகையாளர்களை பிடிக்காது. சிலர் உள்நோக்கத்தோடு கேள்வி கேட்கிறார்கள் என நினைப்பார். ஆனால் அந்தப் பத்திரிகையாளர்களை அந்த இடத்திலேயே சிரித்துக்கொண்டே நையாண்டி செய்து அவர்களை மடக்குவார். அந்த அளவிற்கு திறமையாக பத்திரிகையாளர்களை கையாள்வார்.
அதாவது அரசியலில் அனுபவமும் திறமையும் தான் ஒருவரை மென்மைப்படுத்தும். அதேநேரத்தில் அவர்களை பளிச்சிடச் செய்யும். இவ்வாறு எந்தவித அனுபவமும் இல்லாமல் தமிழக அரசியலே தெரியாமல் ஐபிஎஸ் படித்துவிட்டு பாரதிய ஜனதா தேசிய தலைவர்களின் தயவில் குறுக்கு வழியில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் எப்படி கண்ணியமாக நடந்து கொள்வார். இதெல்லாம் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பத்திரிகை, ஊடகங்கள் கடந்து வந்த பாதையும் அண்ணாமலைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பாரதிதாசன் பத்திரிகையாளர்களுக்கு என இலக்கணமே வகுத்துள்ளார். தமிக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை முதலில் பாரதிதாசனை படிக்க வேண்டும்.
காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்தபத் திரிகைப் பெண்ணே!
– குண்டூசி