கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க முதல்வருக்கு சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கள்ளகிணறு பகுதியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட நான்கு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். கொடூரமான முறையில் படுகொலை செய்த அரக்கர்களை உடனடியாக கைது செய்து
தூக்கிலிட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் அண்ணாதுரை தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு அவர் எழுதியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.. பல்லடத்தின் கருப்பு தினம் இன்று எனவும், வந்தாரை வாழவைக்கும் பூமியாகவும் அமைதி பூங்காவாக விளங்கிய பல்லடம் இன்று மிகப்பெரிய ஒரு கொடூர சம்பவத்தை சந்தித்திருக்கிறது. பல்லடம் பகுதியில் உள்ள கள்ளகிணறு பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராஜ், ரத்தினாம்பாள், புஷ்பாவதி ஆகிய 4 பேரை கொடூரமான முறையில் ஈவு இரக்கமற்ற முறையில் படுகொலை செய்த கொலைகாரர்களை உடனடியாக கைது செய்வதோடு, பெண்ணென்று பாராமல் கொடூரமான முறையில் படுகொலை செய்த அரக்கர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது மக்களுடைய வேதனைக்கு மருந்தாக இருக்கும் என்றாலும் தமிழக அரசு சட்டத்துறை காவல்துறை ஆகியவற்றை பயன்படுத்தி இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் சமூக விரோத செயல்கள் சம்பந்தமாக அரசின் பார்வைக்கு பலமுறை கொண்டு சென்றும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் பொது இடங்களில் மக்கள் பயமின்றி செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் விரோத செயல்கள் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும். பல்லடத்திற்கு கூடுதலாக இரண்டு காவல் நிலையங்களையும் அதிக எண்ணிக்கையில் காவலர்களையும் தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
மேலும் போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குழு அமைத்து கட்டப்பஞ்சாயத்து செய்வது ஆயுதங்களைக் கொண்டு மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்றிடவும் பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் மது அருந்துவர் மீது கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கையும் அப்பாவி மக்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் மக்களை அச்சுறுத்தி வரும் நபர்கள் மீது காவல்துறையில்
புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் படுகொலைக்கு நீதி வழங்க வேண்டும். படுகொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்துக்கு முன்னிறுத்தி கடுமையான தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தல 2 லட்சம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கள்ள சாராயத்தில் பலியான குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்கிய தமிழக அரசு இப்போது போதை அரக்கர்களால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு
தலா 2 லட்சம் என அறிவித்திருப்பது வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின், படுகொலை செய்யப்பட்ட வர்களுக்கு தல ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.