திருப்பூரில் போலி நிதி நிறுவனம் நடத்தி ரூ. 43 லட்சம் மோசடி… : பெண் உட்பட 4 பேர் மீது குண்டாஸ்..!
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே போலி நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்த திருச்சி மற்றும் கரூரை சேர்ந்த ஒரு பெண் உட்பட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. காங்கேயத்தை அடுத்த நீலகாட்டுபுதூரில் NKB பைனான்ஸ் துவங்கப்பட்டு மகளிர் சுய உதவி குழு மற்றும் தனி நபர் கடன் என்கிற பெயரில் கடன் வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.
இந்நிலையில் காங்கேயத்தை அடுத்த பாப்பினி பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் மேற்படி NKB பைனான்ஸ் நிறுவனத்தை அணுகி 2 லட்சம் கடன் கேட்டுள்ளார். அதற்கு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் காப்பீட்டு தொகையாக ரூ.11,000 பெற்றுக்கொண்டு போலியாக கடனுக்கான காசோலை வழங்கி மோசடி செய்துள்ளனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் வரையிலான காலத்திற்குள் பொதுமக்களிடம் ரூ.43 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த தேவிகா (42), கோபி (40), குளித்தலையை சேர்ந்த அருண்குமார் (36), திருச்சி கன்னிமார் கோயில்வீதியை சேர்ந்த ஜான் கென்னடி (34) ஆகிய 4 பேரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனிடையே மேற்படி போலி பைனான்ஸ் நிறுவனம் நடத்தி பல இடங்களில் ஏராளமானவர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிருஸ்துராஜ் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.