“லவ்” படத்தின் திரைவிமர்சனம்
பரத், வானி போஜன், ராதாரவி உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில், ஆர்.பி. பாலா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் “லவ்”.
கதைப்படி… அஜய் ( பரத் ) காஃபி ஷாப்பில் காத்திருக்கிறார். அங்கு அவரைப் பார்ப்பதற்காக திவ்யா ( வானி போஜன் ) தனது தந்தை பார்க்கச் சொன்னதாக வருகிறார். அப்போது ஏற்கனவே பிஸ்னஸில் நஷ்டம் அடைந்ததால் வேறு தொழில் செய்ய இருப்பதாக தன்னைப் பற்றிய கடந்தகால வாழ்க்கையை சொல்கிறார் அஜய். அவனது நேர்மையான பேச்சு திவ்யாவிற்கு பிடித்துப் போக இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடம் சந்தோஷமாக நாட்கள் கழிகிறது.
பின்னர் இருவருக்கும் அடிக்கடி சண்டை, வாக்குவாதம் என தொடர்கிறது. பிஸ்னஸ் செய்வதாக கூறி பல கோடி ரூபாயை இழக்கிறார் அஜய். ஆரம்பத்தில் கணவரை சகித்துக் கொண்டு வாழும் திவ்யா ஒரு கட்டத்தில், கணவனின் செயல்பாடுகளால் அவரைவிட்டு பிரிந்து செல்ல நினைக்கிறார். அப்போது நடக்கும் வாக்குவாதத்தால் இருவருக்கும் சண்டை பெரிதாகிறது.
இருவருக்குமான அழகான காதல் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்ததற்கான உண்மையான காரணம் என்ன ? அஜய்யை பிரிந்து சென்றாரா திவ்யா ? பின்னர் இருவரும் இணைந்தார்களா ? என்பது மீதிக்கதை…
படத்தில் பரத், வானிபோஜன் இருவருக்குமிடையே நடைபெறும் சண்டைக்காட்சிகள் எதார்த்தமாக ரசிக்கும்படியாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். குற்ற உணர்ச்சியோடு வானி போஜனின் கேள்விகளை தவிர்ப்பதும், சப்தம் போட்டு சண்டையிடுவதுமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் பரத். வானி போஜனும் தனக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்.
படத்தின் பெயர்தான் “லவ்”, ஆனால் காதல் காட்சிகளைவிட சண்டை, மனநோய் என பிறகாட்சிகள் தான் அதிகம்.