ஒடுக்கப்பட்ட இளைஞர் கோவிலில் திருநீறு பூசியதால் கண்ணத்தில் அறைந்த பூசாரி, “அம்பு நாடு ஒன்பது குப்பம்” படத்தின் திரைவிமர்சனம்
பி.கே. பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பூபதி கார்த்திகேயன் தயாரிப்பில், ராஜாஜி இயக்கத்தில், சங்ககிரி மாணிக்கம்,ஷஜிதா, விக்ரம், பிரபு மாணிக்கம், மதன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “அம்பு நாடு ஒன்பது குப்பம்”.
கதைப்படி… புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில், யாருக்கு பரிவட்டம் கட்ட வேண்டும் என்கிற தகராறு ஏற்பட்டு இருதரப்பினர் மத்தியில் பிரச்சினை ஏற்பட்டு ஒருவரையொருவர் காலி செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்நிலையில் கோவிலில் பூஜை நடைபெறுகிறது. பின்னர் கோவில் பூசாரி அனைவருக்கும் விபூதி வழங்கி வரும்போது, அந்த ஊரின் காலனியைச் சேர்ந்த இளைஞர் ஒருவன் தட்டை தொட்டு விபூதியை எடுத்து நெற்றியில் பூச, உடனடியாக கோவில் பூசாரி அவனது கண்ணத்தில் அறைந்து, கீழ் ஜாதி பையன் தீபாராதனை தட்டை தொட்டதால் சாமிக்கு தீட்டு பட்டுவிட்டது என்கிறார்.
பின்னர் அவனுடன் வந்த இளைஞர்கள் பூசாரி மீது தாக்குதல் நடத்த, பூசாரியின் உறவினர்கள் காலனி இளைஞர்களை தாக்க ஊரே கலவரபூமியாக மாறுகிறது. மறுநாள் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் கீழத்தெரு, மேலத்தெரு என இருதரப்பும் ஒன்று சேர்ந்து, ஆண்டாண்டு காலமாக நமக்கு அடிமைப்பட்டு கிடந்த காலனி மக்கள், இன்று நம்மை எதிர்த்து அடிக்க துணிந்து விட்டார்கள். அவர்களை இப்படியே விட்டால் நமக்குத்தான் ஆபத்து. சமத்துவம் பேச அவர்கள் கையிலெடுக்கும் ஆயிதம் கோவில், அதற்கு நாம் இடம் தரக்கூடாது.
இந்த விவகாரத்தை நாட்டு பஞ்சாயத்து வைத்து அவர்களை கைகட்டி மன்னிப்பு கேட்க வைப்பதுதான் சரியாக இருக்கும் என முடிவு செய்து நாட்டு பஞ்சாயத்துக்கு நாள் குறித்து அறிவிக்கிறார்கள்.
இதற்கிடையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்க அரசியல் கட்சியினர் தலையிட்டு, நாட்டு பஞ்சாயத்திற்கு போக வேண்டாம். நடப்பதை பார்த்துக் கொள்ளலாம் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கின்றனர்.
இறுதியில் நாட்டு பஞ்சாயத்து நடைபெற்றதா ? ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் கலந்துகொண்டு மன்னிப்பு கேட்டார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை…
இன்றைய காலகட்டத்தில் இதுபோன்ற ஜாதிய அடக்குமுறை சம்பவங்கள் தமிழகத்தில் இல்லை என்றாலும், எப்போதோ நடைபெற்ற சம்பவத்தை மையமாக வைத்து இயக்குனர் இந்த கதையை கையிலெடுத்து அற்புதமாக கையாண்டுள்ளார்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் புதுமுகங்கள் என்றாலும், அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் இறுதிக்காட்சியில் வெளியாகும் பாடல் அனைவரும் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.