நேர்மையான பத்திரிகையாளருக்கு மரணம் தான் பரிசா ?.! “நோக்க… நோக்க…” திரை விமர்சனம்
ஆர் புரொடக்சன்ஸ், ஏவிபி சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் ஆர். முத்துக்குமார் எழுதி இயக்கியுள்ள படம் “நோக்க நோக்க…”
கதைப்படி முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தில் நிருபராக பணி புரியும் பிரதிமா ( ஜோதிராய் ) பணமதிப்பிழப்பு காரணமாக ஏடிஎம் மையங்களில் மக்கள் படும் கஷ்டங்களை செய்தி சேகரித்து, அது சம்பந்தமான வீடியோவை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு தனது மகளை பள்ளியிலிருந்து அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார். வரும் வழியில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள சிலர் ரகசியமாக பணமதிப்பிழப்பு காரணமாக புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றம் செய்ய பேசிக்கொண்டிருக்க, அதனை வீடியோவாக பதிவு செய்கிறார் பத்திரிகையாளர் பிரதிமா.
அப்போது அந்த சமூக விரோத கும்பலால் பெண் பத்திரிகையாளரும் அவரது மகளும் கொடூரமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். அதன்பிறகு இறந்து போன பெண் பத்திரிகையாளரின் குழந்தை பேயாக மாறி சமூக விரோத கும்பலை பழி வாங்கியதா ? அல்லது மன்னித்து விட்டதா என்பது மீதிக்கதை…..
விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்று குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்போனில் மூழ்கியுள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கும் வகையில் கஞ்சா கருப்பு மூலமாக நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அதேபோல் இணையதளங்களில் கடவுள் மறுப்பாளர்கள் என்கிற பெயரில், சிலர் கந்தசஷ்டி கவசத்தை தவறுதலாக சித்தரித்து செய்தி வெளியிடுபவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் ? என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அறிமுக நாயகன் அர்ஜுன் சுந்தரம், நாயகியாக சிந்தியா ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரும் புதுமுகங்கள் என்பதால் சில இடங்களில் வசன உச்சரிப்பு, நடிப்பில் தடுமாற்றங்கள் தெரிகிறது. திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.