அடித்தட்டு மக்களின் உயிரோடு விளையாடிய அமைச்சருக்கு ஏற்பட்ட அதோகதி !
சாந்தி டாக்கிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட நடிகர் நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “மாவீரன்”.
கதைப்படி… நாளிதழ் ஒன்றில் படக்கதை வரையும் வேலை பார்க்கிறார் சத்யா ( சிவகார்த்திகேயன் ). தனது தாய் ( சரிதா ), தங்கையுடன் ( மோனிஷா ) குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார். குடிசைப்பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியிருப்பதாகக் கூறி அனைவரையும் அப்புறப்படுத்துகிறது அரசு. அங்கு சென்ற மக்கள் சுவரில் கைவைத்தால் சிமெண்ட் பெயர்ந்து விழுகிறது. சத்யாவின் தாயார் சமைக்கும் போதும பெயிண்ட் பெயர்ந்து விழுந்ததும் அவர் ஆவேசம் அடைகிறார். சத்யா பயந்த சுபாவம் கொண்டவர் என்பதால் எதையும் அட்ஜஸ்ட் செய்து வாழ வேண்டும் என்கிற கொள்கையுடன் பிரச்சினைகளை பொறுமையாக கையாள்கிறார்.
கட்டிடம் கட்டுவதற்கு அரசாங்கம் ஒதுக்கீடு செய்த நிதியில் அமைச்சர் ஜெயக்கொடி ( மிஷ்கின் ) ஊழல் செய்ததால் தரமற்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என மக்கள் கொந்தளிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சத்யாவின் தாயார் கொந்தளிக்க, அமைச்சரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாததால் தற்கொலை செய்ய முயல்கிறார் சத்யா. அப்போது அவன் காதில் ஒரு குரல் ஒலிக்கிறது. அதன்பிறகு பயம் கொண்டவனாக இருந்த சத்யா பலம் கொண்டவனாக எப்படி மாறுகிறான் என்பதும், அப்பாவி மக்களை எப்படி காப்பாற்றுகிறான் என்பதும் மீதிக்கதை….
அடித்தட்டு மக்களின் இருப்பிட பிரச்சினைகளை மிகவும் எதார்த்தமான முறையில் தனது திரைக்கதையின் மூலம் சொல்லிய இயக்குனர் மடோன் அஸ்வினுக்கு பாராட்டுக்கள்.
சிவகார்த்திகேயனின் காதில் கேட்கும் குரல் இவரை தைரியசாலியாக மாற்றுகிறது. அந்த குரலோடு மேலே பார்த்து பேசும் புதிய மேனரிசம் ரசிக்கவைக்கும் விதமாக அமைந்திருந்தது. சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை அவர் நடித்திராத கதாப்பாத்திரம் இந்த மாவீரன் கதாப்பாத்திரம். இவருக்கு கேட்கும் குரல் நடிகர் விஜய் சேதுபதியின் குரல். அந்தக் குரலுக்கு ஏற்றார் போல் அற்புதமாக நடித்திருக்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சத்யா, மீண்டும் உயிர்ப்பித்து வருவது நெருடலாக உள்ளது. உயிரைக் கொடுத்து மக்களை காப்பாற்றுவான் மாவீரன் என அனைவரது எதிர்பார்ப்பையும், இயக்குனர் ஏமாற்றிவிட்டாரோ என நினைக்கத் தோன்றுகிறது.
மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.