அரசியல்

குறைந்து போன விருப்ப மனு!: குழப்பத்தில் அதிமுகவினர்!

அம்மா காலத்தோடு போயிருச்சுப்பா எல்லாம்.. இதுதான் இப்போது அதிமுகவினரின் விரக்தி பிளஸ் புலம்பலாக உள்ளது. சமீபத்தில் நடந்த அதிமுகவினர் விருப்ப மனு பெறும் நிகழ்விலும் கூட இதுவே எதிரொலித்தது.
அதிமுக யாருடன் கூட்டணி என்பது முடிவாவதற்குள்ளாகவே தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியோடு சேர்த்து 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு அளிக்கலாம் என்று கூறப்பட்டது. கடந்த 4 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை இதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதற்கிடையே 10 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருப்பூருக்கு வரும்போது பெரும் திருப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டது.
அதற்காகவோ என்னவோ விருப்ப மனு வழங்குவதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்பட்டு இம்மாதம் 14ம் தேதி வரை வழங்கப்பட்டது. இப்படி கால நீட்டிப்பு வழங்கப்பட்டு விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டபோதும் இம்முறை விருப்ப மனுக்கள் வாங்கியவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் 4500 க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில் இம்முறை 1737 மனுக்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகே அதிமுக அரசை பாஜகதான் இயக்கி வருகிறது என்ற குற்றசாட்டு இப்போது வரை கூறப்பட்டு வருகிறது. மாநில நலன்கள் முதல் சுயமரியாதை அனைத்தையும் விட்டுக் கொடுத்ததில் இருந்தே தமிழக மக்களுக்கு நன்றாக தெரிந்த விஷயம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக எப்படியும் பாஜகவுடன்தான் கூட்டணி அமைக்கும் என்பது. அதற்கேற்றார்போல இப்போது அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. ஆனால் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை கடுமையாக உள்ளது. நீட் தேர்வு, காவிரி விவகாரம், உதய் மின்திட்டம், கஜாப் புயலுக்கு பிரதமர் எட்டி கூட பார்க்காதது என்று தமிழகத்திற்கு விரோதமான பல்வேறு நடவடிக்கைகள் உள்ளன.
இந்நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளதால் அதிமுகவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகள் கூட கிடைக்காது என்பது தம்பிதுரை உட்பட அதிமுக தொண்டர்களின் மன நிலையும் அதுதான். அதோடு கூட்டணி அமைந்து விட்டால் பாஜகவுக்கு எந்தெந்த இடங்கள் ஒதுக்கப்படும் என்ற நிலையும் தெரியாததால் சில தொகுதிகளுக்கு மிக குறைந்த அளவிலேயே அதிமுகவினர் விருப்ப மனு அளித்துள்ளனர். அதோடு பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமியும் தமிழகத்தில் பாஜக அதிமுகவினருடன் கூட்டணி அமைத்தால் தோற்கும் என்று கூறியுள்ளார். ஆகவே தேர்தலில் நின்று இருக்கின்ற பணத்தையும் செலவழித்துவிட்டு தோற்றுப் போவதை விட நிற்காமல் இருப்பது நல்லது என்று பலரும் எண்ணத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைச்சர்களின் மகன்களும், சகோதரர்களும், அப்பாக்களும் போட்டியிட உள்ளனர். அதற்காக அவர்களும் விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் மகன், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் அப்பா சின்னத்தம்பி, மீன்வளத்துறை அமைச்சரின் மகன், தொழில்துறை அமைச்சர் சம்பத்தின் சகோதரர் என்று குடும்பம் குடும்பமாக தேர்தலை சந்திக்க உள்ளதால் சாதாரண தொண்டர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பரிதவிப்பில் உள்ளனர். வழக்கமாக அதிமுகவா-அந்தக் கட்சியில் யார் வேண்டும் என்றாலும் எம்.பி., எம்.எல்.ஏ ஆகலாம் என்ற எண்ணம் ஜெயலலிதா இருந்தவரை இருந்தது. திமுகவில் குறுநில மன்னர்கள் போன்று மாவட்ட செயலாளர்கள் செயல்படுவதோ அல்லது அங்கிருக்கும் வாரிசு அரசியல் போன்றோ அதிமுகவில் இருக்காது என்பது பொதுவான எண்ணம். ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அது தகர்த்து எறியப்பட்டுள்ளது. ஜெயலலிதா இருந்தபோதும் வாரிசுகளுக்கு பதவி கொடுக்காமல் இல்லை, ஆனால் எண்ணிக்கையில் இந்த அளவுக்கு இருந்தது இல்லை. அதனாலேயே சாதாரண தொண்டர்கள் விருப்ப மனு வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஜெயலலிதா இருந்தவரை அதிமுகவில் என்பது பெரிய அளவில் இருந்தது இல்லை. ஆனால் இப்போதைய நிலைமை அப்படி இல்லை. எடப்பாடி தலைமையில் ஒரு அணி, ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணி இவர்களின் கீழ் உள்ளவர்கள் தலைமையில் சிறு சிறு அணிகள் என்று பல்வேறு பிரிவுகளாக பிரிந்து கிடப்பதால் யாருக்கு யாருடைய சிபாரிசில் சீட் கிடைக்கும் என்ற குழப்பம் கூட ஒரு காரணம். தம்பிதுரை ஆரம்பம் முதலே பாஜக மீது விமர்சன அடைமழையை பொழிந்து வந்தவர், தற்போது வரை நிறுத்துவதாக இல்லை. இந்த நிலையில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துவிட்டால் தனது நிலை என்னவாகும் என்று அவர் அறிந்தே வைத்துள்ளார். தனக்கு வேண்டாதவர்களை தேர்தலில் நிறுத்த பாஜக விரும்பாது என்பதை அவரும் அறிவார். அதன் பின்னர் தனக்கு கட்சியிலும் உரிய முக்கியத்துவம் கிடைக்காது என்பதையும் அவர் அறிந்தே வைத்துள்ளார். ஆகவேதான் அவர் கரூர் தொகுதிக்கு இப்போது விருப்ப மனு அளிக்கவில்லை என்று தெரிகிறது. ஆனால் அந்த தொகுதிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி விருப்ப மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவரது கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவே அவரது பெயரில் பலரும் விருப்ப மனுக்களை வழங்குவது வழக்கம். அது கடந்த தேர்தலில் சற்று அதிகமாக காணப்பட்டது காரணம் பிரதமர் வேட்பாளர் கனவில் ஜெயலலிதாவும் இருந்து மோடியா லேடியா என்ற கோஷத்தை எழுப்பியதன் காரணமாக அவரது பெயரில் மட்டும் கடந்த முறை 1500 விருப்ப மனுக்கள் வாங்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை தலைவர்கள் பெயரில் தொண்டர்கள் பெருமளவு விருப்ப மனுக்கள் கொடுத்ததாக தெரியவில்லை. இப்படியாக பல்வேறு காரணங்களால் அதிமுகவில் விருப்ப மனு பெறுவது கடுமையாக என்ன செய்யப் போகிறார் எடப்பாடி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button