பழனியில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது !

அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா முக்கிய விழாவாகும். தைப்பூசத்தை முன்னிட்டு, பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான தைப்பூசத் திருவிழா 26.01.2026 இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சேவற்கொடியியிடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின்பு காலை 9.30 மணிக்கு மேல் கொடியேற்றத்துக்கான விழா தொடங்கியது. வேல், மயில், சேவல் உருவம் பொறித்த மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் உட்பிரகாரமாகத்தில் வலமாக எடுத்துவரப்பட்டது. அதைத்தொடர்ந்து கோயில் கொடி மரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு இன்று இரவு சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்க குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி சுவாமி புறப்பாடு நடைபெறும்.
வருகிற 31-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று மாலை வெள்ளித்தேரோட்டம் ரத வீதிகளில் நடைபெறும். மணக்கோலத்தில் முத்துக்குமார சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மறுநாள் (பிப்ரவரி 1-ந் தேதி) தேரோட்டம் நடைபெறுகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி தெப்பத்தேர் திருவிழா மற்றும் கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது.




