பாஜக தலைவர் அண்ணாமலை வருகைக்காக… தனியார் பள்ளிகளின் விடுமுறை அறிவிப்பிற்கு எதிர்ப்பு.. வெளியான ரகசிய ஆடியோவால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் என்கிற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நடைபயண நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை சுமார் 5.00 மணிக்கு பல்லடம் மங்கலம் சாலையில் துவங்கிய நடைபயணம் மாணிக்காபுரம்சாலை வழியாக கொசவம்பாளையம் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று பின்னர் பிரதான என் ஜி ஆர் சாலையில் முடிவடைந்து பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் திடீரென பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டுவரும் தனியார் பள்ளிகள் விடுமுறையை அறிவித்தது பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகார் எழுந்துள்ளது. திராவிட இயக்க தமிழர் பேரவை இயக்கத்தின் மாவட்ட செயலாளர் மா. பிரகாஷ் தனது புகாரை தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறைக்கும் அனுப்பியுள்ளார். மேலும் மா. பிரகாஷ் மாவட்ட கல்வி அலுவலரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குழந்தை திடீரென மதியமே பள்ளி விட்டு வீடு திரும்பியதால் எதற்காக விடுமுறை விடப்பட்டுள்ளது என மாவட்ட கல்வி அலுவலரிடம் கேட்டதற்கு பா ஜ க தலைவர் அண்ணாமலை நிகழ்சிக்காக விடுமுறை விடப்பட்டுள்ளதாக ஆடியோ வெளியாகியுள்ளது.
மேலும் மாலை 5.00 மணிக்கு துவங்கவுள்ள நிகழ்சிக்கு எதற்காக மதியமே விடுமுறை அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனிடையே எந்தவித முன் அறிவிப்பும் இன்றி அரசியல் கட்சி தலைவர்கள் வருகைக்காக திடீரென விடுமுறை அளிப்பது மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகிவிடும். எனவே தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான முடிவுகளை அரசு கட்டுப்படுத்தவேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.