அரசியல்தமிழகம்

அன்பழகன் கைதின் உண்மை பின்னணி : பத்திரிகையாளர் மீது பொய்வழக்கு போட்ட காவல்துறை

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது முதல்வர் பேசும் போது எதிரே போடப்பட்டிருந்த நாற்காலிகள் காலியாக இருந்தது.

இந்த நிகழ்வை சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவரும், அதே புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 101 ல் ஸ்டால் நடத்தியவருமான அன்பழகன் காலி சேர்களுடன் பேசிய எடப்பாடி என்று செய்தியை வெளியிட்டார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு அரசின் கவனத்தை ஈர்த்தது. அதற்கடுத்து மூன்றாவது நாள் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் புத்தக கண்காட்சியை பார்வையிட்டு சில அரங்குகளில் புத்தகங்களை வாங்கினார். அப்போது அன்பழகனின் ஸ்டாலை கடந்து செல்லும்போது தமிழக அரசின் ஊழலுக்கு எதிரான புத்தகங்கள் கிடைக்கும் என்ற போஸ்டரை பார்த்து விட்டு கோபமாக சென்று புத்தக கண்காட்சியை நடத்தும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க நிர்வாகிகளிடம் அன்பழகனின் ஸ்டாலை உடனடியாக காலி செய்ய சொல்லி உத்தரவு பிறப்பித்துவிட்டு அங்கிருந்து கோபமாக சென்று விட்டாராம்.

அதன்பிறகு புத்தக கண்காட்சியை நடத்துபவர்களும் அன்பழகனை அழைத்து உடனடியாக அவரது ஸ்டாலை காலி செய்யச்சொல்லி மிரட்டினார்களாம். அவரும் முறையாக பணம் செலுத்தி தான் விற்பனை செய்யும் புத்தகங்களின் பெயர்களை அட்டவணைப்படுத்தி உங்களிடம் கொடுத்து உங்களது அனுமதியுடன் பல லட்ச ரூபாய் செலவு செய்து புத்தகங்களை அச்சிட்டு இங்கு அடுக்கி வைத்திருக்கிறேன். திடீரென என்னை காலி செய்ய சொல்கிறீர்களே என்று இவரது நியாயமான கோரிக்கையை முன்வைத்து முறையிட்டிருக்கிறார். அதற்கு அவர்களோ உங்களது கோரிக்கை நியாயமானதுதான். ஆனால் அரசிடம் இருந்து எங்களுக்கு பிரசர் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் நீங்கள் இன்னும் இரண்டு மணி நேரத்தில் காலி செய்யுங்கள் என்று அன்பழகனுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.

அதன்பிறகு இந்த செய்தி காட்டுத்தீயாக பத்திரிகையாளர்கள் மத்தியில் பரவியது. நமது குழுவினர் புத்தக கண்காட்சி நடக்கும் ஒய்எம்சிஏ மைதானத்தில் பத்திரிகையாளர் அன்பழகனை சந்தித்து அவருக்கெதிராக நடக்கும் அநீதிகள் பற்றி அவரிடம் விசாரித்த போது,

“மக்கள் செய்தி மையம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் புத்தகங்கள் வெளியிட்டு இருக்கிறோம். அதேபோல், கடந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறோம்.

நான் முறையான அனுமதியுடன் புத்தகத்தை விற்பனை செய்கிறேன். அவர்கள் விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் நடந்து கொண்டேன். இருந்தாலும் அரசு எங்களுக்கு நெருக்கடி கொடுப்பதால் நீங்கள் காலி செய்யுங்கள் என்று என்னிடம் கூறுகிறார்கள். நானும் அவர்கள் கூறும் காரணத்தை எழுத்து வடிவில் எழுதிக் கொடுத்தால் காலி செய்கிறேன் என்று கூறிவிட்டேன். இதுவரை நான் கட்டிய பணத்திற்கு எந்தவித ரசீதும் கொடுக்கவில்லை. நாளை மாலை பம்மல், பல்லாவரம் நகராட்சிகள் சம்பந்தமான ஊழல் புத்தகங்களை வெளியிடுவதாக இருந்தோம். இன்று கடையை காலி செய்யச் சொன்னதால் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத்தலைவர் வசீகரன் தலைமையில் இப்போதே பம்மல், பல்லாவரம் நகராட்சிகளில் நடைபெற்ற ஊழல் சம்பந்தமான புத்தகங்களை வெளியிட இருக்கிறோம். அதிமுக அரசால் பத்திரிகை ஜனநாயகத்தின் உரிமை நசுக்கப்படுகிறது.

நாங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் புத்தகங்களை அச்சிட்டு வியாபார நோக்கத்தில் விற்பனை செய்யவில்லை. மக்கள் மத்தியில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காகத்தான் புத்தகங்களை அச்சிட்டு வெளியிடுகிறோம். இந்த புத்தக கண்காட்சிக்கு வரும் வாசகர்கள் இது போன்ற புத்தகங்களை படித்து விழிப்புணர்வு ஏற்பட்டு இந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலைக்கு சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் தான் எங்களுடைய புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என்று தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து எனது கடையை காலி செய்யச் சொல்லி சட்டவிரோத செயலில் ஈடுபடுகிறார்கள்.

இதுவரை நாற்பத்து இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த எந்த ஆட்சியாளர்களும் புத்தக கண்காட்சிக்கு பணம் கொடுத்தது இல்லை. ஆனால் நாற்பத்து மூன்றாவது புத்தக கண்காட்சியை துவக்கி வைத்த முதல்வர் எடப்பாடி 75 லட்ச ரூபாய் அடுத்த ஆண்டு தருவதாக அறிவித்திருக்கிறார். இந்த புத்தக கண்காட்சியை நடத்துபவர்கள் ஒரு தனியார் அமைப்பு. இந்த நிகழ்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன். புத்தக கண்காட்சி துவக்க விழாவில் முதல்வருக்கு அடுத்த நிலையில் வைகை செல்வனுக்குத்தான் அமைச்சர்களை விட அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதற்கு என்ன காரணம் என்று கண்காட்சியை நடத்தும் நிர்வாகிகள்தான் விளக்க வேண்டும். இந்த விழா நிகழ்ச்சி நிரலில் துவக்க விழாவில் சிறப்புரை வைகைச் செல்வன் நிறைவு நாளில் சிறப்பு விருந்தினர் வைகை செல்வன் என்றே அச்சிட்டு இருக்கிறார்கள். ஏன் இவரைத் தவிர தமிழகத்தில் வேறுயாரும் தகுதியான இலக்கியவாதிகள் யாரும் இந்த தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் கண்களுக்குத் தெரியவில்லையா?

கூட்டுறவு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்ட தனியார் அமைப்புக்கு அரசு ஏன் 75 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. இந்த அமைப்பினர் ஏன் வைகைச் செல்வனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதற்கான காரணம் விரைவில் வெளிச்சத்துக்கு வரத்தான் போகிறது என்று அன்பழகன் கூறினார்.
இந்த சமயத்தில் அன்பழகன் அரங்கு அமைந்துள்ள கடை எண் 101 ற்கு வருகை தந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத்தலைவர் வசீகரன் தனது கட்சியினருடன் பம்மல், பல்லாவரம் நகராட்சிகளில் நடைபெற்ற ஊழல் புத்தகங்களை வெளியிட்டார். அதனை தமிழ்நாடு ஜெர்னலிஸ்ட் யூனியன் பொதுச்செயலாளர் ராபர்ட் ராஜ் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கத்தின் தலைவர் சரவணன் பெற்றுக்கொண்டனர்.

இதுகுறித்து வசீகரன் நம்மிடம் கூறுகையில், அன்பழகனின் புத்தக அரங்கை காலி செய்ய சொல்வது ஒன்றும் புதிய விஷயமாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் மத்தியிலும் மாநிலத்திலும் அராஜகமான ஆட்சிதான் நடந்து கொண்டு இருக்கிறது. ஆட்சியாளர்கள் ஊழல் செய்வதை வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களை தடுப்பது முறையான செயல் அல்ல. இங்கு இருக்கும் புத்தகங்கள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் வெளியிடப்பட்டவை. ஜெயலலிதா இருந்தபோதே 1 லட்சம் கோடி என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டது. இதுவரை வெளியிடப்பட்ட ஊழல் புத்தகங்களில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீதோ அதிகாரிகள் மீதோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் முறைப்படி அனுமதி பெற்று கடை நடத்தும் அன்பழகனை கடையை காலி செய்யச் சொல்லி பத்திரிகையாளர்களின் உரிமையை பறிக்கிறார்கள்.
இன்றைய ஆட்சியாளர்களின் ஊழலை தைரியமாக வெளிப்படுத்தும் பத்திரிகையாளர்களை அடக்கி ஒடுக்க நினைக்கிறார்கள். அன்பழகன் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் படி முறையான தகவல்களைப் பெற்றுத்தான் ஆதாரத்துடன் புத்தகங்களை வெளியிடுகிறார். தவறு செய்தவர்களை ஆதாரத்துடன் தைரியமாக வெளியிடும் பத்திரிகையாளர்களின் கழுத்தை நெறிக்கும் போக்கை இந்த அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். மாறாக தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும்.
இந்த அரங்கிற்கு வருகை தரும் பொதுமக்களிடம் நுழைவுக்கட்டணம் பத்து ரூபாய் வசூல் செய்கிறார்கள். உணவகத்தில் 1 சாப்பாடு நூறு ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். ஒரு டீ முப்பது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற ஏராளமான கடைகளை வாடகைக்கு விட்டு பணம் வசூல் செய்யும் தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிப்பாளர் சங்கத்தினர் முறையான கணக்குகளை காட்ட வேண்டும்.

குறிப்பிட்டு அன்பழகனை மட்டும் அரசுக்கு எதிராக ஊழல் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என்று சொல்வது என்பது அவர்மீது தனிப்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தச் செயல். ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் போக்கை நிறுத்திக் கொள்ளாவிட்டால் தமிழகத்தில் மாபெரும் போராட்டத்தை ஆம் ஆத்மி கட்சி நடத்தும் என்று கூறினார்.

அதன்பிறகு நள்ளிரவில் அன்பழகன் மீது சைதாப்பேட்டை போலீசார் போட்ட பொய்வழக்கின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, இரவு முழுவதும் காவல்துறை வாகனத்திலேயே ஊரைச் சுற்றிக் கொண்டே அதாவது குற்றவாளிகளை செய்வதுபோல் கண்ணியமிக்க பத்திரிகையாளர் அன்பழகனை காவல்துறையினர் நடத்திய விதம் அனைத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அன்பழகன் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மறுமலர்ச்சி திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, தமுமுக ஜவாஹிருல்லா, பல்வேறு பத்திரிகை சங்கங்களின் நிர்வாகிகள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு அதிமுக அரசின் அராஜக போக்கை வெளிப்படுத்தும் விதமாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தார்கள்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button