Featuredஅரசியல்தமிழகம்தமிழகம்

ஜெயலலிதா மரண வழக்கு அப்போலோ தரப்பு மீண்டும் அவகாசம் கோரக் கூடாது… – உச்ச நீதிமன்றம்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கை விசாரித்துவரும ஆறுமுகசாமி ஆணைய விசாரணை வழக்கை தள்ளிவைக்கும்படி அப்போலோ மருத்துவமனை விடுத்த கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என்று அப்போலோ தரப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போலோ மருத்துவமனையின் மேல்முறையீட்டைத் தொடர்ந்து விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி அப்துல் நசீர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று அப்போலோ மருத்துவமனை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்ட தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ஆணையத்தின் விசாரணை ஒரு மாதத்தில் நிறைவடைந்து, அறிக்கை தாக்கல் செய்யும் நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். எனவே, தடையை நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் முடக்கி வருவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் குற்றம்சாட்டி வாதிடப்பட்டது.

அத்துடன், இந்த மனுக்கள் மீதான விசாரணை 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இந்த மனுக்களை விசாரிக்க சிறிது நேரமே போதுமானது. ஆனாலும் ஏன் இந்த மனுக்கள் விசாரிக்கப்படாமல் உள்ளன என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. விசாரணையில் வாதங்களை முன்வைக்க முன் தயாரிப்புடன் வர வேண்டும் என்றும் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதிட்டார்.இதையடுத்து, விசாரணையை அக்டோபர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், மீண்டும் அவகாசம் கோரக் கூடாது என்று அப்போலோ தரப்புக்கு திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இறப்பதற்கு முன், கோடநாடு செல்ல விரும்பிய ஜெயலலிதா… சசிகலா சொன்ன உண்மை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து, 2016 ஆம் ஆண்டு டிசம்பர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, இறப்பதற்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டுக்குச் செல்ல விரும்பியதாக, ஜெயலலிதாவின் தோழி சகிகலா கூறியுள்ள கருத்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வெளியிட்டுள்ளது. இது குறித்து நமது எம்ஜிஆர் நாளிதழில் சசிகலா கூறியதாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “இதய தெய்வம் அம்மா அவர்கள் குணமடைந்து வந்ததால், அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிசம்பர் 19, 2016 அன்று போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவெடித்தோம். ஆனால், நான் நேராக கொடநாடுதான் போவேன் என்று மருத்துவர்களிடமே அம்மா அவர்கள் சொன்னார்கள்.

அதற்கு, “அங்கு குளிராக இருக்கும், நாங்கள் உங்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய அங்கு வருவது கடினமாக இருக்கும். அதனால் எங்களுக்காக ஒரு மாதமாவது சென்னையில் இருங்கள் அதன் பிறகு கொட நாடு செல்லலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள். அதற்கு, “இங்கே நான்தான் பாஸ்” என்று மருத்துவர்களிடம் இதய தெய்வம் அம்மா அவர்கள் சொன்னார்கள்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாள்கள் மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆணடு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். மரணத்தின் மீதான சர்ச்சையும் அப்போதே தொடங்கிவிட்டது. அது இன்றுவரையில் தொடர்கிறது.

ஜெயலலிதா மரணத்திற்குக் காரணம் என்ன என்பதை அறியவே ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button