அரசியல்

அதிமுக உட்கட்சி பூசல் : சமாளிப்பாரா எடப்பாடி பழனிசாமி?

அதிமுக மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் வைத்திலிங்கம் தனக்கு மத்திய அமைச்சர் பதவி தராவிட்டால் கட்சியை உடைப்பேன் என ஓபிஎஸ் – ஈபிஎஸ்க்கு மிரட்டல் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.
கடந்த 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சியைப் பிடித்தபோது ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பி.பழனியப்பன் ஆகியோர் முக்கிய முடிவுகளை எடுக்க முடிந்தது. கட்சி மற்றும் ஆட்சி நிர்வாகத்தில் அவர்கள் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக இருந்தனர்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் வைத்திலிங்கம் ஒரத்தநாடு தொகுதியில் தோல்வியடைந்தார். ஆனால், அவர் மீது மதிப்பு வைத்திருந்த ஜெயலலிதா அவரை மாநிலங்களவை எம்பி ஆக்கினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பையும் கொடுத்தார்.
இந்த அளவுக்கு முக்கிய நபராக இருந்த அனுபவம் மிக்கவர் வைத்தியலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பும் அதிமுக உடைந்து மீண்டும் சேர்ந்தபோது ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு அடுத்தபடியாக துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பைப் பெற்றார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்விலும் வைத்தியலிங்கத்தின் ஆலோசனைப்படியே முடிவு எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால், பாஜக வெற்றி பெற்றால், மாநிலங்களவை எம்.பி.யாக இருக்கும் தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என மனக்கோட்டை கட்டியுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டுமே எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ளார். இதனால், மத்திய அமைச்சர் பதவியை தன் மகனுக்கு பெற்றுத்தர ஓபிஎஸ் டெல்லி பாஜக தலைமையிடம் பேசியுள்ளார். தமிழகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் முகமாக அதிமுக மாநிலங்களவை எம்பிகளில் ஒரிருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பாஜக தலைமையை வலியுறுத்தியுள்ளார். ஆனால், தமிழகத்திலிருந்து ஒரே ஒரு நபருக்கு மட்டுமே முதல் கட்ட அமைச்சரவையில் பதவி கிடைக்கும் எனவும் அதுவும் இணை அமைச்சர் பதவியாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிமுக – பாஜக கூட்டணி சார்பில் வென்றுள்ள தனி நபராக இருப்பதால், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தான் அமைச்சர் பதவியைப் பெறப்போகிறார் எனவும் தகவல் வெளியானது.
இச்சூழலில் அதிமுகவில் உள்ள மூத்த அமைச்சர்கள் ரவீந்திரநாத்க்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். மாநிலங்களவை எம்பியாக இருக்கும் வைத்தியலிங்கம், நவநீதகிருஷ்ணன் போன்றோர் உள்ளனர். வைத்திலிங்கம் மூத்தவராக இருக்கிறார். மாநிலங்களவையில் அவரது பதவிக்காலம் ஜூன் 2022 வரை உள்ளது. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கேட்பதே சரி எனவும் ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கக் கூடாது எனவும் ஈபிஸ்-ஓபிஎஸ் இருவருக்கும் நெருக்கடி கொடுப்பதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், ஓபிஎஸ் எப்படியாவது தனது மகனுக்கு மத்திய அமைச்சர் வாங்க முயன்று வருகிறார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் பதவி தனக்கு கிடைக்காவிட்டால் கட்சியை சின்னாபின்னமாக்கிவிடுவேன் என வைத்திலிங்கம் மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் இதைப் பற்றி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாவும் கூறப்படுகிறது. டிடிவி தினகரன் அடிக்கடி ஆட்சியைக் கலைக்க ஸ்லீப்பர் செல்ஸ் அதிமுகவில் இருப்பதாகக் கூறிவருகிறார். அண்மையில், தேர்தல் முடிவுகள் பற்றி பேசும்போதும் ஸ்லீப்பர் செல் யாரென்பது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும் எனத் தெரிவித்துள்ளார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்தரநாத் அமைச்சர் ஆகக் கூடாது என்பதற்காக கட்சியின் மூத்த நிர்வாகிக்ள வரிந்துகட்டுவதால் இந்த டிடிவி தினகரனின் ஸ்லீப்பர் செல்ஸ் புதிர் அவிழும் வாய்ப்பு அமையக்கூடும். அப்படி நடந்தால் அதிமுக மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும். இந்த நெருக்கடியை சமாளித்து ஆட்சியையும் கட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம்தான் உள்ளது.
நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கு மத்திய அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்ற நிலையில் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடியைத் தொடர்ந்து 24 உறுப்பினர்கள் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். 25 உறுப்பினர்கள் மத்திய இணை அமைச்சர்களாகவும், 9 உறுப்பினர்கள் தனிப்பொறுப்பு இணை அமைச்சர்களாகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். மொத்தமாக நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 58 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி சார்பில், துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் மற்றும் அதிமுக மாநிலங்களை உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் வைத்தி லிங்கம் ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது மத்திய அமைச்சரவையிலோ, இணையமைச்சராகவோ அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறவில்லை. கடந்த முறை தமிழகத்தில் இருந்து பொன்.ராதாகிருஷ்ணன் மட்டும் மத்திய இணையமைச்சராக பொறுப்பு வகித்த நிலையில், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட அமைச்சரவையில் இடம் பெறவில்லை.
இவர்களுக்குள் இருக்கும் குழப்பத்தை போக்கி ஆட்சி தக்க வைக்க எடப்பாடி முயற்சி செய்வதாக தகவல்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button