தமிழகம்

திருப்பூரில் கணவரின் மர்ம மரணம்.! டிஜிபி-யிடம் கேரளப் பெண் புகார்

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூருக்கு அருகே உள்ள பெருமாட்டி பஞ்சாயத்தை அடுத்த விளையோடி கிராமத்தில் வசித்து வருபவர் சாந்தி (43), 21 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ள நிலையில் கணவர் சுரேஷ்குமார்(47), திருப்பூரில் உள்ள சிக்கன் செண்டரில் வேலைபார்த்து வந்துள்ளார். சாந்தி காப்பீட்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் கணவர் சுரேஷ்குமார் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 21 ஆண்டுகளாக திருப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் தேதி சிக்கன் செண்டரில் இருந்து சந்தோஷ் மணி என்பவர் சாந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு கணவர் சுரேஷ்குமார் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரே மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்ததில் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி கேரளாவில் இருந்து தனது மகள் மற்றும் மகனுடன் திருப்பூர் வந்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதுள்ளார். பின்னர் செந்தில் சிக்கன் செண்டருக்கு சென்று விசாரித்தபோது அதிக மது அருந்தியதால் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக சுரேஷ் குறித்து அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். மேலும் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் 384/2022 எண்ணாக முதல் தகவல் அறிக்கையில் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவசர அவசரமாக தன்னிடம் கையெழுத்து வாங்கியதோடு கணவரின் உடலை எரியூட்டியதால் சாந்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். அதனைத்தொடர்ந்து மொழிப்பிரச்சனையால் எந்த ஒரு தகவலும் பெறமுடியாமல் கேரளாவிற்கு குடும்பத்தாருடன் திரும்பியிருக்கிறார்.

பின்னர் தனது கணவர் இறப்பு குறித்த தகவல்கள் வேண்டி திருப்பூர் மாநகர காவல் ஆணையருக்கு கடந்த 03.07.2022 அன்று சாந்தி மனு அளிதிருந்த நிலையில் மனு மீது தகவல் அளிக்க 15.10.2022 அன்று பரிந்துரைக்கப்பட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். மேலும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தனது கணவரின் இறப்பு குறித்து சில தகவல்களை பெற்றுள்ளார். பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையையடுத்து, கடந்த 04.06.2022 அன்று மாறுதல் அறிக்கையை தெற்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளரால் வழங்கப்பட்டுள்ளது. அதில் சந்தேக மரணமாக பதியப்பட்ட வழக்கு சாலை விபத்தாக மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே கடந்த 15.10.2022 அன்று சுரேஷ்குமார் இறந்து 5 மாதங்கள் கழித்து மனைவி சாந்தியிடம் கவரிங் செயின் மற்றும் சாவி ஒன்றை கொடுத்து மன்சூர் என்பவரிடமிருந்து பெற்றுக்கொண்டதாக கையெழுத்து பெற்றுள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வயிறு, தோல்பட்டை மார்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எழும்பு முறிவு ஏற்பட்டு ரத்தம் உறைந்து மரணமடைந்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே மேற்படி சிக்கன் செண்டரின் உரிமையாளர் செந்தில் மூர்த்தி, சந்தோஷ்மணி மற்றும் சவுந்திரராஜன், சங்கர், மன்சூர்,சரத், முத்து, பொன்னையா, அந்தோணிதாஸ், சரவணன், ஷேக் தாவூத் ஆகிய 11 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க திருப்பூர் தெற்கு காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தனது கணவரின் மரணம் குறித்து மேற்படி நபர்களிடம் விசாரணை மேற்கொள்வதில் காவல்துறையினர் மவுணம் காத்ததால் அதிர்ச்சி அடைந்த சாந்தி, தனது கணவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு உண்மை நிலையை வெளிச்சத்திற்கு கொண்டு வர தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிற்கு புகார் மனு அளித்துள்ளார். தற்போது புகாரின் பேரில் மாநகர காவல் துறை சார்பில் விசாரணை துவங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது என சாந்தி தெரிவித்தார்.

மேலும் தொழிலாளர் நலத்துறை சார்பில் சுரேஷ்குமார் மனைவி அளித்த புகாருக்கும் இது வரை சிக்கன் செண்டர் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு பதிலும் அளிக்காமல் அலட்சியம் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. ஒருவர் மரணமடைவது இயற்கை. ஆனால் தனது கணவர் இயற்கைக்கு மாறான மரணம் அடைந்திருப்பதாக கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் கணவரின் மர்ம மரணம் குறித்து புகார் தெரிவித்து சுமார் ஓராண்டாகியும், இது வரை முடிவுக்கு வராத விசாரணை பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button