தயாரிப்பாளர்கள் சங்கமும், தாணுவும்..!
தமிழ்த் திரையுலகில் முக்கியமான சங்கமாக திகழ்வது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தற்போது நிர்வாகத்தில் உள்ள உறுப்பினர்களும், ஏனைய முன்னணி தயாரிப்பாளர்களும் தேர்தலில் போட்டியிட அணிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் மத்தியில் விசாரித்தபோது… தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் முரளி தலைமையில் தேர்தலில் போட்டியிட நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்க நுங்கம்பாக்கம் “பாம் குரோவ்” ஹோட்டலில் ஆலோசனை செய்து வருகின்றனர். அதேபோல் தற்போது செயலாளராக இருக்கும் மன்னன், ஜே.எஸ்.கே, உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் உறுப்பினர்களிடம் ஆலோசனை செய்து வருவதாக தெரியவருகிறது. தேர்தல் என்றால் அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவது இயல்புதான்.
ஆனால் கடந்த இரண்டு தேர்தல்களிலும் எந்தப் பதவிக்கும் போட்டியிடாமல் ஏதாவது ஒரு அணிக்கு ஆதரவு அளிப்பதோடு, பணத்தை செலவுசெய்து அந்த அணியை தோற்கடிப்பதையே வாடிக்கையாக வைத்துள்ளாராம் பிரபல தயாரிப்பாளர் தாணு. இது உண்மையா ? என நாம் ஆச்சர்யத்தோடு கேட்டபோது… மேலும் அந்த தயாரிப்பாளர் ஆதாரங்களை அடுக்குத் தொடங்கினார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிட்ட போது, அவருக்கு எதிராக ராதாகிருஷ்ணனுக்கு பத்து லட்ச ரூபாய் செலவு செய்து இதே பாம் குரோவ் ஹோட்டலில் வேலையை தொடங்கி வைத்தாராம் தாணு. பின்னர் கடந்த தேர்தலில் தற்போது தலைவராக இருக்கும் முரளிக்கு எதிராக டி. ராஜேந்தரை தலைவர் பதவிக்கு போட்டியிட அதேபோல் பத்து லட்ச ரூபாய் கொடுத்து வேலையை தொடங்கி வைத்தாராம். தயாரிப்பாளர் தாணு பணம் கொடுத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இரண்டு பேரும், தோல்வியை தழுவினார்களே தவிர யாரும் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லையாம்.
இந்நிலையில் தற்போது தலைவராக இருக்கும் முரளி தலைமையில் போட்டியிட நிர்வாகிகள் தேர்வு செய்வதற்காக பாம் குரோவ் ஹோட்டலில் நடைபெறும் ஆலோசனைகளுக்கு பத்து லட்ச ரூபாய் கொடுத்து வேலையை தொடங்கி வைத்திருக்கிறாராம் தயாரிப்பாளர் தாணு. இன்றைய தலைவர் முரளி நல்ல மனிதர்தான், ஆனால் தாணுவின் ராசி முரளிக்கு பாதகம் வராமல் இருக்குமா என்பதில் ஆயிரம் சந்தேகங்கள் இருப்பதாக கூறுகிறார்கள்.
இதனால் தயாரிப்பாளர் தாணுவுக்கு என்ன லாபம் என நாம் கேட்டபோது… நான் பாம் குரோவ் ஹோட்டலுக்குத்தான் செல்கிறேன். பிறகு பேசலாம் எனக்கூறி அவசரமாக கிளம்பிச் சென்றார் அந்த தயாரிப்பாளர்.