கொரோனாவுக்கு சிகிச்சை: கர்ப்பிணி பெண்கள் திண்டாட்டம்!
இராஜபாளையம் அரசு மருத்துவமனை முற்றிலும் கொரோனா தொற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மகப்பேறு மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதால் கர்ப்பிணிப் பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் றிகிசிஸி மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனை என இரண்டு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் றிகிசிஸி மருத்துவமனையில் புறநோயாளிகள், உள்நோயாளிகள், விபத்து, இது போன்ற அனைத்து நோய்க்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டையை தொடர்ந்து இராஜபாளையம் மருத்துவமனையில் தொற்றுப் பாதித்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஒதுக்கப்பட்ட இருபது படுக்கைகளும் நிரம்பி விட்டதால் மற்ற அறைகளை பயன்படுத்தும் நோக்கத்தில் மருத்துவமனை முற்றிலும் கொரோனா நோய்க்காக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இங்கு வரும் நோயாளிகள் அனைவரையும் மகப்பேறு மருத்துவமனைக்கு செல்ல மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு என தனியாக இடத்தை ஒதுக்கி கொடுக்காமல் நோயாளிகளும் கர்ப்பிணிப் பெண்களும் ஒன்றாக சிகிச்சை பெற்று வருவதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு எளிதில் நோய்த் தொற்று ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
நோயாளிகளுக்கு தனியாக சிகிச்சை அளிப்பது மற்றும் மாத்திரை வழங்கும் இடங்கள் என தனியாக பிரித்து வழிமுறைகளை செய்ய மருத்துவ நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.