எல்லைப் பகுதியில் உள்வாங்கியதா விவசாய நிலம் !..?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ளது சுல்தாண்பேட்டை. கோவை திருப்பூர் என இரு மாவட்ட எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வதம்பச்சேரி கிராமத்திற்கு அருகே உள்ள நல்லூர் பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலம் சுமார் 25 அடி அளவிற்கு மண் தோண்டப்பட்டு உள்வாங்கியது போல் காட்சியளிக்கிறது.
கடந்த சில மாதங்களாக ஹிட்டாச்சி இயந்திரத்தை கொண்டு ரத்தத்தை உரிஞ்சுவதைப் போல் விவசாய நிலத்தில் இருந்து மண் அள்ளப்பட்டு கடத்தப்படுவதை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடிய விடிய லாரிகள் தூக்கமின்றி சோர்வடையாமல் மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மண் கடத்தலை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகளுக்கு மக்கள் புகார் கொடுத்தால் பெயரளவிற்கு ஆய்வு செய்கின்றனர். மேலும் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் நடைபெற்றுவரும் இது போன்ற மண் கடத்தல் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வருவதற்குள் பல கோடிகளை சம்பாதித்து விடுகின்றனர்.
மேலும் விவசாய நிலங்களின் அருகில் செல்லும் அதிக உயரழுத்த மின்சார டவர்களுக்கு அருகிலேயே பள்ளம் தோண்டப்பட்டு மண் அள்ளப்பட்டிருப்பது கூடிய விரைவில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும், சரிந்து விழக்கூடிய அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மண் கடத்துவது குற்றம் – உடந்தையாக செயல்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை காற்றில் பறக்கவிட்டுவிட்டனரா? என்கிற கேள்வி எழுகிறது.
மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கோ அல்லது வருவாய் ஆய்வாளருக்கோ தெரியாதா? தேவை ஒரே ஒரு பதில் மற்றும் கண்டுபிடிக்க வேண்டியதும் கூட – விளை நிலத்தில் உள்வாங்கிய மண் வளம் எங்கே சென்றது? யார் பொறுப்பு?