அரசியல்தமிழகம்

தவறான உதாரணமாகி விடும்: இந்து என்.ராம்

நக்கீரன் கோபாலை சட்டப்பிரிவு 124-ன் கீழ் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுமதிப்பது மோசமான முன்னுதாரணமாகிவிடும் என நக்கீரன் கோபால் வழக்கில் இந்து என்.ராம் வலியுறுத்தினார்.
ஆளுநரின் பணியில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது சட்டப்பிரிவு 124-ன் கீழ் ஜாம்பஜார் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆளுநரின் கூடுதல் செயலாளர் செங்கோட்டையன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபால், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு நீதிபதி கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப்பிரிவு 124-ன் கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது என்று அவரின் வழக்கறிஞர் வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து, அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
அப்போது, ஊடகங்கள் சார்பில் வாதிட அனுமதிக்க வேண்டும் என இந்து என்.ராம் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அவர், தனது கருத்துகளை நீதிமன்றத்தில் எடுத்துரைத்தார். வழக்கு விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்து என்.ராம், சுதந்திரமான நீதித்துறைக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்த வழக்கில் எனது கருத்துகளை நீதிபதி கேட்டார். ஒரு மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் அவர் கேட்டிருக்கலாம். நான் 3 கருத்துகளை நீதிபதி முன் எடுத்து வைத்தேன். முதலாவது, சட்டப்பிரிவு 124-க்கும் இதற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஒரு பத்திரிகையாளர் அல்லது பத்திரிகை நிறுவனம் மீது இந்தப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. பிரிவு 124 என்பது பலவந்தமாக ஆளுநர், ஜனாதிபதி ஆகியோரைப் பணி செய்யவிடாமல் தடுப்பதே. ஆளுநரின் பணிக்குத் தடை செய்ததாக இந்த வழக்கை அனுமதித்தால், பெரும் ஆபத்தாகிவிடும். மேலும், இந்தச் சர்ச்சையில் ஆளுநரின் பெயரைப் புகுத்துவது, அவரது பதவிக்கு உகந்ததல்ல என்று தெரிவித்தேன்’’ என்றார். விடுதலை செய்யப்பட்ட பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நக்கீரன் கோபால்,நீதித்துறை கருத்து சுதந்திரத்தின் பக்கம் நின்றுள்ளது. ராஜ்பவன் குறித்து கிடைத்த ஒரு தகவலை புலனாய்வு செய்து வெளியிட்டோம். இந்தக் கைது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அனைவருக்கும் நன்றி’’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button