ஒரே மழை.. சேறும் சகதியான திருமழிசை சந்தை
ஒரே நாள் இரவில் பெய்த மழையால் சென்னை மாநகருக்கே காய்கறி சப்ளை செய்யும் திருமழிசை சந்தை சேறும் சகதியுமாக மாறி, எருமை மாடுகள் மேயும் நிலையில் சுகாதாரச் சீர்கேட்டோடு காணப்படுகிறது. திரும்பும் பக்கம் எல்லாம் சகதிக்காடாகியுள்ளதால் வாகனங்கள் உள்ளே சென்று வெளியே வர முடியாத நிலை உள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
சென்னை மாநகரில் கொரோனா பரவல் அதிகரிக்க முக்கிய காரணமாக கோயம்பேடு சந்தை கருதப்பட்டதால், திருமழிசை பகுதியில் தற்காலிக சந்தை அமைக்கப்பட்டது. இரும்புத் தடுப்புகள் கொண்டு சுமார் 200 கடைகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன. ஆரம்பத்தில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். நாளடைவில் இந்த நடைமுறைகளில் தொய்வு ஏற்பட்டது.
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் 600க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்லும் திருமழிசை தற்காலிக சந்தையில் வண்டல் மண் மட்டும் கொட்டப்பட்டதாக கூறப்படுகிறது-. ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்த நிலையில் சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக மாறி, வாகனங்கள் வந்து செல்ல முடியாமல் அங்கு வருவோரும் நடக்க முடியாத அளவுக்கு மோசமான நிலைக்கு உள்ளாகியுள்ளது.
வெளியில் இருந்து வரும் காய்கறிகளை இறக்கி வைக்க போதிய இடம் இல்லாததாலும் அழுகிப்போன, பழைய காய்கறிகளை அகற்ற முடியாத நிலை உள்ளதாலும் புதிதாக வரும் காய்கறிகளை அவற்றின் மீதே அடுக்கி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்தக் காய்கறிகளை உண்பதற்காக அங்கு சுற்றித் திரியும் எருமை மாடுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வளவு சுகாதார சீர்கேட்டோடு புழங்கும் காய்கறிகள் தான் சென்னை மாநகர மக்களுக்கு சிறு வியாபாரிகளால் வாங்கிச் செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன.
இதனிடையே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் கோயம்பேடு காய்கறி சந்தையை பராமரிக்கும் சி.எம்.டி.ஏவின் உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சந்தையை ஆய்வு செய்தனர். வியாபாரிகளின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, கால்நடைகள் உள்ளே நுழையாதவாறு சந்தையைச் சுற்றிலும் வேலி போடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார். மற்ற பிரச்சனைகளை சரிசெய்யவும் நடவடிக்கைகள் அடுத்தடுத்து எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.