கோவில் உண்டியலில் திருடியதோடு, சிறுநீர் கழித்துச் சென்ற திருடன்
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நயினார்கோவிலில் ஸ்ரீ நாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அதிகாலை மார்கழி பூஜைக்காக பிரகாரத்தின் உள்ளை வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள், நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக நயினார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது அதிகாலை 2.10 மணி அளவில் கோவிலுக்குள் வரும் மர்மநபர் உண்டியலை உடைத்து பணத்தை திருடுகிறார். தொடர்ந்து கோயில் ஊரணி கரை வழியாக வெளியேறி சென்றுள்ளார். பிரசித்தி பெற்ற நாகநாதர் சுவாமி கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அக்டோபர் 10 ஆம் தேதி உண்டியல் காணிக்கை பணம் எண்ணிய நிலையில் ரூபாய் 3 லட்சம் மதிப்புள்ள பணம் திருடு போயிருக்கலாம் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமராக்கள் அடிப்படையில் நயினார்கோவில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிஎஸ்பி பால்பாண்டி சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார், கோயில் பிரகாரத்தில் உள்ள உண்டியலை உடைத்து பணத்தை அள்ளிக்கொண்டு சென்ற திருடன் உண்டியல் மீது சிறுநீர் கழித்து செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.