“கங்குவா” சரித்திர சாதனை படமா ? வழக்கமான கமர்ஷியல் படமா ?
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் நடிப்பில், சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “கங்குவா”.
கதைப்படி.. ஒரு ஆராய்ச்சி கூடத்தில் சிறுவர்களின் மூளை திறனை அதிகரிக்க ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். அங்கிருந்து அந்த சிறுவன் தப்பித்து கோவா சென்றடைகிறான்.கோவாவில் பிரான்சிஸ் ( சூர்யா ) அவரது உதவியாளர் யோகி பாபு, திஷா பதானி, அவரது உதவியாளர் ரெடின் கிங்ஸ்லி ஆகிய நான்கு பேரும் இரண்டு குழுக்களாக காவல் ஆணையருக்கு ( கே எஸ் ரவிக்குமார் ) காவல்துறையால் பிடிக்க முடியாத ரவுடிகளை பிடித்துக்கொடுத்து பணம் சம்பாதிக்கிறார்கள். இருவருக்கும் காதல், மோதல் என காட்சிகள் நகர்கிறது.
ஒரு ரவுடியை பிடிக்கும் போது அவனை பிரான்சிஸ் சுட நேரிடுகிறது. அதை அந்த சிறுவன் பார்க்க, சாட்சி இருக்கிறதே என பிரான்சிஸ் அவனை தூக்க வரும்போது, ஆராய்ச்சி குழுவினர் அவனை தூங்குகிறார்கள், சிறுவன் மீது அதீதமான பாசத்தை காட்டும் பிரான்சிஸ், ஏதோ முன்ஜென்ம உறவு இருப்பதாக உணர்கிறான்.
அப்போது 1070 ஆம் ஆண்டு ரோமானிய மன்னன், ஒரு தீவில் இருக்கும் ஐந்து மலைக்கிராமங்களை அடைய நினைத்து வீரர்களுடன் கடலில் பயணிக்கிறான். அப்போது பெருமாச்சி கிராம மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள். அவர்களை போரிட்டு வெற்றி பெறமுடியாது, சூழ்ச்சியால் வெல்லலாம் என அரத்தி கிராமத்தைச் சேர்ந்த போஸ் வெங்கட் கூறி, கொடுவா என்பவனை ( நட்டி நட்ராஜ் ) அறிமுகப்படுத்த, நட்டியும் தங்க காசுகளுக்கு ஆசைப்பட்டு பெருமாச்சி வீரர்களை பழி கொடுக்கிறார். பெருமாச்சியின் இளவரசனான கங்குவா முன்னிலையில் நட்டி தீக்கிரையாக, அவரது மனைவி தன் மகனை கங்குவா கையில் ஒப்படைத்துவிட்டு அவளும் தீக்குளிக்கிறார். மக்களின் எதிர்ப்பை மீறி, அந்தப் பையனை காப்பாற்றுவதாக கங்குவா வாக்கு கொடுக்கிறார்.
ரோமானிய மன்னன் ஐந்தீவுகளையும் கைப்பற்றினானா ? ஐந்தீவுகளின் மக்கள் என்னானார்கள் ? கங்குவா கொடுத்த வாக்கை காப்பாற்றினானா என்பது மீதிக்கதை…
படத்தில் பிரமாண்டம் இருந்தாலும், அதற்கு இணையாக கதையும் இருக்க வேண்டுமல்லவா, பாகுபலிக்கு இணையாக தமிழில், அதுவும் சூர்யா நடிப்பில் பத்து மொழிகளில், பத்தாயிரம் திரையரங்குகளில் வெளியாகிறது எனத் தெரிந்ததும், தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என திரையுலகினர் எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், மலைப்பிரதேசங்களில் விதவிதமான ஆடை, அணிகலன்கள் முரட்டுத்தனமான மக்களின் வாழ்க்கை முறை, போர் பயிற்சி என கவனம் செலுத்திய இயக்குநர் சிவா, பார்வையாளர்களை கதாப்பாத்திரத்திரத்தோடு கனெக்ட் செய்ய தவறிவிட்டார் என்றே சொல்லலாம்.
சூர்யா மலை பிரதேசத்தில் பாம்பு தேள் முதலை போன்ற உயிரினங்களுடன் சண்டையிடுவது, அவரது தோற்றம், உடல் மொழியால் கங்குவா கதாப்பாத்திரத்தில் பார்வையாளர்களை ஈர்த்து, மொத்த படத்தையும் சுமந்து சென்றிருக்கிறார். இந்த கதாப்பாத்திரத்திற்காக சூர்யா அர்பணிப்போடு மெனக்கெட்டுள்ளார்.
படத்தில் நிறைய முன்னனி நடிகர்கள் நடித்திருந்தாலும், போஸ் வெங்கட், கருணாஸ், பாபி தியோல் போன்ற ஒரு சிலரை மட்டும் அடையாளம் காணமுடிகிறது. தேவி ஶ்ரீ பிரசாத் இசை படம் முழுவதும் வசீகரித்ததோடு, சில இடங்களில் நெருடலை ஏற்படுத்துகிறது. இயக்குநர் கொஞ்சம் கதையில் கவணம் செலுத்தியிருந்தால், வழக்கமான கமர்ஷியல் படமாக இல்லாமல், சரித்திர படமாக மாறியிருக்கும் கங்குவா.