இளைஞர்களுக்கான பாடமா ? பொழுதுபோக்கு படமா ? “விஜயானந்த்” திரைவிமர்சனம்
வி.ஆர்.எல். பிலிம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆனந்த் சங்கேஷ்வர் தயாரிப்பில், நிஹால், சிரி பிரஹலாத், ஆனந்த் நாக், வினயா பிரசாத் நடிப்பில், ரிஷிகா சர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகியிருக்கும் படம் “விஜயானந்த்”
கதைப்படி…. பழைய பிரிண்டிங் மிஷினை வைத்து அச்சகத் தொழிலை செய்து வருகிறார் சங்கேஷ்வர். அப்பா காலால் மிதித்து கஷ்டப்பட்டு பிரிண்டிங் செய்வதை விரும்பாத விஜய், நவீனமான விக்டோரியா-800 மிஷினை எண்பது ஆயிரம் ரூபாய்க்கு கடனாக வாங்கி தொழிலைத் தொடங்கி, கடனையும் அடைத்து தனது புத்திக் கூர்மையால் அதிக லாபம் வரும் அளவிற்கு பிரிண்டிங் தொழிலை உயர்த்துகிறார்.
பின்னர் ஒரே தொழிலை நம்பி இருக்காமல், லாரி வாங்கலாம் என முடிவு செய்து குடும்பத்தினருடன் கலந்து ஆலோசனை செய்கிறார். ஆனால் யாருக்கும் விருப்பம் இல்லை என்றாலும், சுய முயற்சியால் கடன் பெற்று லாரி ஒன்றை வாங்கி மார்கெட்டில் வாடிக்கையாளர்களை உருவாக்குவதற்காக பல நாட்களாக காத்திருக்கிறார். அந்த மார்க்கெட்டில் பல ஆண்டுகளாக அதிகாரம் செலுத்தி வரும் நபர்களை மீறி பால்ய நண்பரின் துணையோடு தொழிலைப் பெருக்கி முன்னேறுகிறார். வாழ்கையில் தனது துணிச்சலான முடிவுகளால், தான் சந்திக்கும் நஷ்டங்களைப் பற்றி கவலைப்படாமல், தனக்கான இலக்கை நிர்ணயித்து அதை நோக்கியே பயணிக்கிறார் விஜய்.
இந்நிலையில் புகழ்பெற்ற பத்திரிகையில் விஜய்யை பற்றிய நெகட்டிவான செய்திகள் வருகிறது. ஒரு கட்டத்தில் அந்த பத்திரிகை ஆசிரியரின் ஆணவ பேச்சால்… விஜய் சொந்தமாக பத்திரிகை ஆரம்பிக்க முடிவு செய்கிறார். தனக்குத் தெரியாத அனுபவமில்லாத தொழிலாக இருந்தாலும் சரியான திட்டமிடலும், நேர்மையும் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு விஜய் உதாரணமாக திகழ்கிறார்.
தந்தையின் மூலமாக கற்றுக் கொண்ட பிரிண்டிங் தொழிலை நம்பி வாழாமல், சொந்தமாக லாரி வாங்கி தானே ஓட்டி, சரக்குகளை புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்று, ஒரு லாரியிடன் ஆரம்பித்து ஐயாரத்து ஐநூறு லாரிகளாக உருவாக்கி முன்னேறிய தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஷ்வரரின் வாழ்க்கை வரலாற்றின் முக்கிய சம்பவங்களை தனது அற்புதமான திரைக்கதையின் மூலம் இளைய சமுதாயத்தினர் கற்றுக்கொள்ளும் விதத்தில், நேர்த்தியாக இயக்கியுள்ளார் ரிஷிகா சர்மா. கன்னட மொழியில் தயாரான இந்தப் படத்திற்கு நேர்த்தியான வசனங்களை எழுதியுள்ளார் எழுத்தாளர் மதுரகவி.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் என அனைவரும் அந்தந்த கதாப்பாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தும் வகையில் நடித்திருக்கிறார்கள். எத்தனையோ வாழ்க்கை வரலாற்றுப் படங்களைப் பார்த்திருந்தாலும், இந்தப் படம் பார்ப்பவர்களின் மனதில் கண்டிப்பாக இழந்த காலங்களையோ, வருங்கலத்தையோ நினைவு படுத்தும் என்பதில் ஐயமில்லை.
மொத்தத்தில் படக்குழுவினருக்கு “நாற்காலி செய்தி” பத்திரிகை குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.