பல்லடத்தில் ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால், ஆம்புலன்சுக்கு.!.?
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் சின்மயா கார்டன் பகுதியில் ரூபாய். 90 லட்சம் மதிப்பீட்டில் பூங்காவும், பல்லடம் அரசு மருத்துவமனையில் ரூபாய். 50 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.எஸ்.வினீத் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக வடுகபாளையத்தில் பல்லடம் நகராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பூங்காவினை அமைச்சர் துவக்கி வைத்தார். பின்னர் அங்கிருந்து கிளம்பி பல்லடம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கார்களில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். முன்னதாக மாவட்ட ஆட்சியர் பயணித்த கார் மருத்துவமனை நுழைவு வாயில் வழியாக செல்லமுயன்றபோது உயரமாக கட்டப்பட்ட திண்டுப்பகுதியில் ஏறமுடியாமல் பின்நோக்கிச் சென்றது. பின்னர் நெடுஞ்சாலையிலேயே காரில் இருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியர் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு நடந்தே சென்றார்.
மேலும் இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள், கடந்த பல மாதங்களாக பல்லடம் அரசு மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள பாலம் திண்டு போல் உயரமாக கட்டப்பட்டுள்ளதால் இருசக்கர வாகனத்தில் வரும் நோயாளிகளின் உறவினர்கள் தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படுவதாகவும், சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வரும் வேளையில் இது போன்று உயரமாக உள்ள நுழைவாயில் பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து நெடுஞ்சாலை துறையினரிடம் கேட்டபோது சாலை விரிவாக்கப்பணியின் போது நகராட்சி நிர்வாகத்திடம் திட்டின் உயரத்தை குறைக்க கூறியிருந்ததாகவும், தீர்மாணம் நிறைவேற்றி பணிகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்க்கும் நிகழ்ச்சி நடைபெறுவது முன்கூட்டியே தெரிந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக செயல்பட்டது யார்? பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அவசரத் தேவைக்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் இது போன்று ஆபத்தாக கட்டப்பட்டிருப்பதால் ஆட்சியர் வாகனமே செல்லமுடியாத நிலை என்றால் ஆம்புலென்ஸ் செல்வதற்குள் நோயாளிகள் பாடு என்னவாகும். என்னத்தான் மாற்றுப்பாதை அமைத்திருந்தாலும் எந்த வித அறிவிப்புமின்றி பிரதான வாயிலின் உயரம் உடனடியாக குறைக்கப்பட்டு பொதுமக்களை காயமின்றி காக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.