“பாசக்கார பய” படத்தின் திரைவிமர்சனம்
காயன் பிக்சர்ஸ், நற்கவி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிப்பில், நடிகர் விக்னேஷ், காயத்ரி நடிப்பில் விவேகபாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “பாசக்காரபய”
கதைப்படி… மாயவரம் அருகே உள்ள கிராமத்தில் தேன்மொழி ( காயத்ரி )என்கிற இளம்பெண் டெய்லர் கடை நடத்திக்கொண்டு தனியாக வசித்து வருகிறார். இந்தப் பெண்ணை சுப்பிரமணி ( பிரதாப் )என்கிற இளைஞன் விரும்புகிறார். தேன்மொழியிடம் தனது காதலை சொல்வதற்காக பலமுறை முயற்சி செய்தும் முடியாமல் தள்ளிப் போகிறது.
இதற்கிடையில் தனது காதல் நிறைவேற அந்த ஊரில் வசிக்கும் வெற்றிலை சாமியாரின் யோசனையில் ஊரில் உள்ள பெண்களுக்கு ஜாக்கெட் துணியும், நூறு ரூபாய் பணமும் தானமளிக்கிறார். அந்தப் பெண்கள் அனைவரும் ஜாக்கெட் துணிகளை தேன்மொழியின் கடைக்கு கொண்டுவந்து தைக்க கொடுக்கிறார்கள். வேலை அதிமாக வந்ததால் தேன்மொழி சந்தோஷப்படுகிறார்.
அதன்பிறகு ஒருகட்டத்தில் சுப்பிரமணி தனது காதலை வெளிப்படுத்த, தேன்மொழி சிறையில் இருக்கும் தனது மாமாவை விரும்புவதாகவும், அவரைத்தான் கல்யாணம் செய்ய இருப்பதாகவும் கூறி சுப்பிரமணியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் சிறையிலிருந்து தேன்மொழியின் மாமா குணா ( விக்னேஷ் ) வெளியே வருகிறார்.
குணா மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்துகிறார் தேன்மொழி. குணா தேன்மொழியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில் சுப்பிரமணிக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கிடையில் சூழ்நிலை காரணமாக கொலை வழக்கில் மீண்டும் சிறைக்குச் செல்கிறார். அதன்பிறகு தேன்மொழியின் காதல் நிறைவேறியதா ? இல்லையா ? அவரது வாழ்கை என்னானது ? என்பது மீதிக்கதை…
படத்தில் கஞ்சா கருப்பு நகைச்சுவை காட்சிகளிலும், படத்தின் இயக்குனர் விவேகபாரதி குணச்சித்திர காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்கள். சௌந்தர்யன் இசையில் நான்கு பாடல்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் சில சமுதாயத்தினர் அக்கா மகளை திருமணம் செய்ய மாட்டார்கள். இந்த கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர். திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.