மதம், மொழி, இனம் கடந்து மனிதத்தை வலியுறுத்தும் “பம்பர்”
வேதா பிக்சர்ஸ் எஸ் தியாகராஜா B.E., தயாரிப்பில், செல்வக்குமார் இயக்கத்தில், வெற்றி, ஷிவானி, தங்கதுரை உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “பம்பர்”.
கதைப்படி… தூத்துக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறி உள்ளிட்ட சிறுசிறு குற்றங்களைச் செய்து அடிக்கடி காவல்நிலையம் சென்று வருகிறார் புலிப்பாண்டி ( வெற்றி ). இதன் காரணமாக காவல்நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு இவர்களுக்கு நெருக்கமாகி இவர்கள் செய்யும் தவறுகளுக்கு துணை போவதோடு, இவர்களுக்கு பாட்னராகிறார். இந்நிலையில் அங்கு தொழில் நிறுவனங்கள் நடத்திவரும் இரு சகோதர்களுக்கிடையே சொத்து தகராறு ஏற்பட, ஒருவருக்கு ஆதரவாக ஏட்டு தலையிட்டு தம்பியை தீர்த்துக்கட்ட புலிப்பாண்டி டீமை நியமிக்கிறார்.
இவர்களும் பணத்திற்காக ஒப்புக்கொண்டு சம்பந்தப்பட்ட நபரை நோட்டமிடுகின்றனர். அப்போது தூத்துக்குடிக்கு புதிதாக வரும் காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ( மதன் ) ஒட்டுமொத்த ரௌடிகளையும் ஒடுக்க நினைத்து, அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார். அப்போது இவர்கள் கொலை செய்ய நினைத்த தம்பிகாரன் முந்திக்கொண்டு அண்ணனை கொலை செய்கிறான். எஸ்.பிக்கு பயந்து புலிப்பாண்டி நண்பர்களுடன் ஐய்யப்பன் கோவிலில் தஞ்சமடைகின்றனர். பின்னர் மாலை அணிவித்து பக்தர்களாக ஐய்யப்பனை தரிசிக்க கேரளா செல்கின்றனர்.
அங்கே பம்பையில் தங்கியிருக்கும் போது இஸ்மாயில் என்கிற முதியவரிடம் கேரள அரசின் “பம்பர்” குலுக்கல் லாட்டரி சீட்டு வாங்குகிறார் புலிப்பாண்டி. பின்னர் அந்த லாட்டரி சீட்டை தவறுதலாக அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகிறார். பின்னர் புலிப்பாண்டியை தனது அத்தை மகள் காதலிக்கிறார். அதன்பிறகு அந்த சீட்டை விற்ற இஸ்மாயில் அதை பத்திரமாக எடுத்து வைக்கிறார். எதிர்பாராத விதமாக அந்த சீட்டிற்கு பத்து கோடி ரூபாய் பம்பர் பரிசு கிடைக்கிறது. அந்த சீட்டை வைத்திருக்கும் இஸ்மாயிலுக்கு குடும்ப கஷ்டங்கள் எவ்வளவோ இருந்தும், அதனை பணம் கொடுத்து வாங்கியவரிடம் ஒப்படைப்பதற்காக தூத்துக்குடி வருகிறார்.
பெயர், விலாசம் தெரியாத நிலையில், புலிப்பாண்டியை கண்டுபிடித்து பம்பர் பரிசு விழுந்த லாட்டரியை ஒப்படைத்தாரா ? பணத்திற்காக கொலை செய்யக்கூட தயங்காத புலிப்பாண்டி வகையறாவிற்கு, பணம் கிடைத்தது தெரிந்ததும், அவர்களின் மனநிலை என்னவானது ? என்பது மீதிக்கதை…
படத்தில் மதம், இனம், மொழி கடந்து நேர்மையை இறுதிவரை கடைபிடிக்கும் இஸ்மாயில் கதாபாத்திரம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அனைவரையும் கண்கலங்க வைக்கிறது. படத்தின் நாயகன் இஸ்மாயிலா, புலிப்பாண்டியா என்கிற அளவுக்கு திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.
புலிப்பாண்டி கதாப்பாத்திரத்தில் வெற்றி அனைவர் மனதிலும் நிற்கிறார். நாயகி ஷிவானி குறைவான காட்சிகளில் தோன்றினாலும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது நண்பர்கள் தங்கதுரை உள்ளிட்டவர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.
மொத்தத்தில் பம்பர் படம் சமீபத்தில் வெளியான படங்களில் அனைவரும் பார்க்க வேண்டிய படம் என்றே சொல்லலாம். மதம் கடந்து மனிதத்தை வலியுறுத்தும் திரைக்கதைக்கோ, இஸ்மாயில் கதாப்பாத்திரத்தில் நடித்த ஹரிஸ் பெராடி_க்கோ விருது கிடைத்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.