விமர்சனம்

கிராமத்து மக்களின் பழக்க வழக்கம், அணிகலன்களின் பின்னனியை விவரிக்கிறதா ? “தண்டட்டி” திரைப்படம் !

பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிப்பில், ராம் சங்கையா இயக்கத்தில், பசுபதி, ரோகிணி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் “தண்டட்டி”.

கதைப்படி…  தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள கிராமம் கிடாரிப்பட்டி. இந்த ஊரில் எந்தப் பிரச்சினையானாலும் ஊரிலேயே பஞ்சாயத்தில் பேசி முடித்துக் கொள்வார்கள். இந்த ஊரிலிருந்து யாரும் காவல்நிலையத்திற்கு போகக்கூடாது. அதையும் மீறி ஏதாவது புகார் சம்பந்தமாக காவலர்கள் ஊருக்குள் வந்தால் அடித்து உதைத்து அனுப்பிவிடுவார்கள்.

இந்த ஊரில் வசித்துவரும் தங்கப் பொண்ணு ( ரோகிணி ) என்கிற வயதான மூதாட்டி காணாமல் போகிறார். அவரைக் கண்டுபிடித்து தருமாறு அவரது பேரன் ( முகேஷ் ), அவரது நான்கு மகள்கள் ( தீபா, பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ) ஒவ்வொருவராக அலரியடித்து காவல் நிலையத்திற்கு ஓடி வருகிறார்கள். அந்த சமயத்தில் யாரும் இவர்களின் புகாரை வாங்காத நிலையில், ஆறு மாதத்திற்கு முன்புதான் அந்த காவல்நிலையத்திற்கு பணி மாற்றத்தில் வந்த சுப்பிரமணி ( பசுபதி ) , தங்கப் பொண்ணை கண்டுபிடித்து மருத்துவ மனையில் சேர்க்கிறார். சிறிது நேரத்தில் இறந்து போகிறார். சடலத்தை அடக்கம் செய்யும்வரை பாதுகாப்புக்கு உடன் இருக்குமாறு அவரது பேரன் கேட்டுக்கொள்ள, ஒட்டுமொத்த காவலர்களின் பேச்சை மீறி சடலத்துடன் கிடாரிப்பட்டி கிராமத்திற்குச் செல்கிறார் சுப்பிரமணி.

பின்னர் ஊர் வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு தங்கப் பொண்ணு வின் உடல் நடுவீட்டில் நாற்காலியில் அமர்த்தி, சுற்றிலும் வயதானவர்கள் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுகின்றனர். ஆனால் அவரது வாரிசுகளுக்கு சடலத்தின் காதுகளில் தொங்கும் தண்டட்டி மீதுதான் கவணம் முழுவதும் இருக்கிறது. அனைவரும் அயர்ந்து தூங்கிவிட, அதிகாலையில் சடலத்தின் காதுகளில் இருந்த தண்டட்டியை காணவில்லை. உடனடியாக அந்த இடமே ரணகளமாகிறது. தண்டட்டியை கண்டுபிடிக்கும் வேலையைத் தொடங்குகிறார் காவலர் சுப்பிரமணி. அந்த ஊரிலுள்ள ஒவ்வொருவரும் விவகாரமாக பேசுகின்றனர். பசுபதியை பாடாதபாடு படுத்துகிறார்கள்.

அதன்பிறகு தண்டட்டியை கண்டுபிடித்தாரா ? தண்டட்டிக்கும் தங்கப் பொண்ணுவிற்குமான தொடர்பு என்ன ? தங்கப் பொண்ணு வீட்டைவிட்டு போகக் காரணம் என்ன ? என்பது மீதிக்கதை…

இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் நகரும்போது படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவரவர் கிராமத்து வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் உணர்வையும், மலரும் நினைவுகளையும் நினைக்கத் தோன்றுகிறது. கிராமத்து மக்களின் எதார்த்தமான வாழ்க்கை முறையை தத்ரூபமாக திரைக்கதை அமைத்து, பழங்காலத்தில் நம் முன்னோர்கள் அணிகலன்களை ஏன் எதற்காக அணிவித்தார்கள் ? என இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தியுள்ள இயக்குனருக்கு பாராட்டுக்கள்.

படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button