இருள் பயமுறுத்துமா ? வெளிச்சம் நம்பிக்கை தருமா ? “லத்தி” திரைவிமர்சனம்.
ரானா புரொடக்சன்ஸ் சார்பில் நந்தா,ரமனா தயாரிப்பில், விஷால், சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், ரமனா, முனிஷ் காந்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் வினோத் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “லத்தி”.
கதைப்படி… முருகானந்தம் என்கிற காவலர் காவல்நிலையத்தில் லத்தியால் தாக்கியதால் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். பின்னர் மேல் அதிகாரிகளின் பரிந்துரைகள் மூலமாக மீண்டும் அதே காவல்நிலையத்தில் பணியில் சேர்கிறார். இவர் வேலையில் சேர்வதற்கு பரிந்துரை செய்த உயர் அதிகாரியின் மகள் ஒருவரால் பாதிக்கப்படுகிறார். பாதிப்புக்குள்ளாக்கிய நபரை அடிப்பதற்காக முருகானந்தம் வரவழைக்கப்படுகிறார்.
முருகானந்தமும் அதிகாரியின் உத்தரவை ஏற்று தனது முழு பலத்தையும் பிரயோகித்து பலமாக தாக்கியதோடு, அவனை அம்மனமாக குப்பை மேட்டில் வீசி விடுகிறார். அடி வாங்கியவன் பிரபல ரவுடியின் மகன். பின்னர் தன்னை அடித்த போலீஸ்காரனை பழிவாங்குவாங்க வேண்டும் என ரவுடியின் கும்பல் தேடி அலைகிறது. ரவுடிகளின் தேடலில், போலீஸ்காரர் முருகானந்தம் சிக்கினாரா ? இல்லையா ? அதன்பிறகு என்ன ஆனது என்பதுதான் மீதிக்கதை…
விஷால் தன்னை ஒரு சிறந்த நடிகராக இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் என்றே சொல்லலாம். அவரது உடலும், உயரமும் போலீஸ் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக அமைந்திருக்கிறது. இடைவேளைக்குப் பிறகு ஆக்ஷன் காட்சிகளிலும், சென்டிமென்ட் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.
விஷாலின் மகனாக நடித்துள்ள சிறுவனும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டை காட்சியில் பயமில்லாமல் நடித்துள்ள சிறுவனுக்கு நாற்காலி செய்தி குழுமத்தின் சார்பில் பாராட்டுக்கள். மற்றபடி படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தின் முதல்பாதியை சலிப்பு இல்லாமல் நகர்த்திய இயக்குனர், இடைவேளைக்குப் பிறகு ஒரே கட்டிடத்தில் கதையை நகர்த்தியிருக்கிறார். படம் முழுக்க லாஜிக் இல்லாத காட்சிகள் ஏராளம். படத்தில் வசனங்கள் சிறப்பு. இருள் பயமுறுத்தும், வெளிச்சம் நம்பிக்கை கொடுக்கும் போன்ற வசனங்கள் குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் சண்டைக்காட்சிகள் புதுமையாக இருந்தது. அதுவும் நூறுபேர் வந்தாலும் ஒரே ஆள் அடித்து விரட்டும் காட்சிகள் நம்பும் படியாகவா இருக்கிறது ? என படம் பார்ப்பவர்கள் புலம்பல் சத்தமும் தியேட்டரில் கேட்டது. பிரபல ரவுடியாகவும், அவரது மகனாக நடித்துள்ள ரம்னாவின் நடிப்பிலும் செயற்கைத் தனம் தெரிகிறது. ரம்யாவுக்கு இயல்பான நடிப்பு இன்னும் வரவில்லை.