மாயமான அரசுப்பள்ளி மாணவனின் சைக்கிள் கல்குவாரியில் மீட்பு !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட குப்புசாமிநாயுடுபுரம் பகுயில் உள்ள ஹரிவரதன் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் தியாகராஜன். திருத்தணியை சேர்ந்த தியாகராஜன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு குடியேறி காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு அமுதா என்கிற மனைவியும், கவுதம்(13) என்கிற மகனும், 4 வது படிக்கும் மகளும் உள்ளனர்.
மேலும் கவுதம் லட்சுமி மில் அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். தடகள விளையாட்டில் பல்வேறு சாதனைகள் படைத்திருக்கும் கவுதம் கடந்த நவம்பர் மாதம் 28,29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான தடகளப்போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருப்பூர் மாவட்டம் சார்பில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று 24 ஆம் தேதி சனிக்கிழமை முதல் அரையாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாலை விளையாடிவிட்டு வருவதாக வெளியே சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு வெகு நேரமாகியும் கவுதம் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனிடையே செம்மிபாளையம் அருகே சின்னச்சாமி என்பவருக்கு சொந்தமான செயல்படாத பாறைக்குழியில் மாணவன் கவுதம் அணிந்திருந்த உடைகளும், காலனியும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பாறைக்குழியில் சுமார் 25 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கியிருப்பதால் குழிக்கச்சென்ற மாணவன் கவுதம் நீரில் மூழ்கியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தீயணைப்புத்துறையினர் உதவுயுடன் தேடுதல் வேடை நடத்தினர்.
மேலும் இரண்டு டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு கம்ரசர்கள் பயன்படுத்தப்பட்டும், நவீன ரக கேமராவை பயன்படுத்தியும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் யாருமே எதிர்பாராத விதமாக பாறைக்குழியில் கவுதம் பயன்படுத்திய சைக்கில் நீருக்கடியில் இருந்து மீட்கப்பட்டது. மேலும் காலை முதல் மாலை வரை தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோதும் கவுதம் கிடைக்கவில்லை. மேலும் இரவு நேரம் ஆகிவிட்டதாலும், மழை துவங்கி விட்டதாலும் நாளை கவுதமை தேடும் பணியை தொடரவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கவுதம் குழிக்கச்சென்ற பாறைக்குழியில் உடைகள் ஒரு ஓரமாகவும், சைக்கிள் ஒரு ஓரமாக தண்ணீருக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மேலும் சைக்கிளில் இரண்டு சக்கரத்திலும் காற்று இல்லாமலும், வால்டியூப் இல்லாமலும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவன் குளிக்கச்சென்ற இடத்தில் எதற்காக சைக்கிள் கிடந்தது என்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். 8 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாயமானதில் பாறைக்குழியில் இருந்து சைக்கிள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.