ஜெ. மரணத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்புமா “செங்களம்” வெப் தொடர் !.?
அபி & அபி நிறுவனத்தின் தயாரிப்பில், எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில், ஜீ-5 வெளியிடும் வெப் தொடர் “செங்களம்”
கதைப்படி… விஜியின் ( பாலு மகேந்திரா ) மகன்கள் கலையரசன், டேனி, லகுபரன் ஆகிய மூன்று பேரும், மூன்று கொலையை செய்துவிட்டு, மேலும் மூன்று கொலைகள் செய்வதற்காக காட்டில் பதுங்கியிருக்கிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக விருதுநகர் நகராட்சி நாற்பது ஆண்டுகளாக சரத் லோகித்சவா குடும்பத்தினர் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது அவரது மூத்த மகன் பவன் நகராட்சி தலைவராக இருக்கிறார். இந்நிலையில் அவருக்கு வாணி போஜனை இரண்டாவது திருமணம் செய்து வைக்கின்றனர். அவர்கள் திருமணமாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஹனிமூனுக்கு கொடைக்கானல் செல்கின்றனர். கொடைக்கானலை நெருங்கும் சமயத்தில் விபத்தில் சிக்கி பவன் இறந்து போகிறார்.
அதன்பிறகு தன் கணவரின் இடத்தில் அமர்ந்து அரசியல் செய்ய ஆசைப்படுகிறார் வாணி போஜன். அதற்கு அரசியல் தெரிந்த தனது பள்ளிக்கால தோழி ஷாலியை அழைத்து வந்து தன் கூடவே வைத்துக் கொண்டு,அவரது ஆலோசனைப்படி தேர்தலில் போட்டியிட்டு நகராட்சி தலைவராகிறார். இது அவரது மாமனார் குடும்பத்தின் அதிகாரங்களை சீர்குலைக்கும் வகையில் அமைந்து விடுகிறது.
சரத் லோகித்சவா குடும்பத்தினரின் நாற்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை, இரண்டு பெண்கள் சேர்ந்து எவ்வாறு கைப்பற்றினார்கள் ? அதன்பிறகு நடந்தது என்ன என்பது மீதிக்கதை…
இந்த தொடரில் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளராக முத்துக்குமார், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக வேலா ராமமூர்த்தி, அவரது உதவியாளராக பக்ஸ் ஆகிய மூவரும் நிகழ்கால அரசியலை கண்முன் நிறுத்தும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். நான்கு குழந்தைகளின் தாயாக பாலுமகேந்திரா பட்டறையில் வளர்ந்த விஜி நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
வீல் சேரில் வலம்வரும் கதாப்பாத்திரத்தில் சரத் லோகித்சவா கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மகன்களாக பவன், பிரேம், மகளாக பூஜா மூவரும் மூவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
மாநில அரசியலில் கோலோச்சிய ஒரு குடும்பத்தை நினைவுகூரும் வகையில் காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன். மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்கு அரசாங்கமே தீர்வுகாண முடியாமல், அமைதி காத்து வரும் நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை அமைத்து, சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குனர்.
விருதுநகர், தூத்துக்குடி மாவட்டத்தின் இயற்கை எழில்மிகு இடங்களை கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றிவேல். இந்த தொடருக்கு தரண்குமாரின் இசை மேலும் வலுசேர்த்திருக்கிறது.
ஒட்டு மொத்தத்தில் மாநில அரசியலில் நிகழ்ந்த நிகழ்வுகளின் தொகுப்பை, மாவட்ட அரசியலில் சுருக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன்.