தமிழகம்

அரசு அலுவலகங்களில் தீபாவளி கலெக்‌ஷன் : ரெய்டில் சிக்கிய அதிகாரிகள்!

பண்டிகை காலங்களில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் பட்டாசு பெட்டிகள், பரிசுகள், பணம் ஆகியவை பெறுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சியில், தீபாவளிக்கு சில தினங்களே உள்ள நிலையில், நகராட்சி ஊழியர்கள் முறைகேடாக தீபாவளி வசூலுக்காக லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து, ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் ஆய்வாளர் பீட்டர் ஆகியோர் தலைமையில், கீழக்கரை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

தொடர்ந்து 4 மணி நேரம் சோதனைக்கு பிறகு கணக்கில் வராத ஒரு லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதில் முறையான ஆவணங்களை ஊழியர்கள் சமர்ப்பித்து ஒரு லட்சத்தை திரும்பப் பெற்றனர். மீதமுள்ள 77 ஆயிரம் ரூபாய்க்கு முறையான ஆவணங்கள் மற்றும் கணக்குகள் இல்லை. எனவே, இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் 77 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி தொடர்ந்து நகராட்சி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகர்கள், அலுவலர்கள் ஆகியோரை அலுவலகத்துக்குள் பூட்டிவைத்து ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 20க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சிக்கின. 100க்கும் மேற்பட்ட வாகன உரிமங்களையும் கைப்பற்றினர்.

திருப்பூர் நீதிமன்ற வீதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, மேலாளர் அறை, அலுவலக அறை ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கொங்குபாளையம் ஊராட்சி செயலாளர் தமிழரசனிடம் இருந்து 51,000 உட்பட கணக்கில் வராத 82 ஆயிரத்து 875 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பகோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் 29 ஆயிரம் ரூபாய் பணமும், 100க்கும் மேற்பட்ட பட்டாசு பெட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வட்டாட்சியர் வானதியிடம் விசாரணை நடைபெற்றது.

& ராஜா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button