டிக்டாக் பரிதாபங்கள்…
மதுரையில் டிக்டாக்கில் நடிப்புத்திறமையை காட்டிய இரு தோழிகளை, விலைமாதர்களாக சித்தரித்து அதே டிக்டாக்கில் பரப்பியதால், தோழிகளில் ஒருவர் குடும்பத்தை பிரிந்து வீதியில் தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தோழிகளான மீனாட்சியும் கயலும் பாரம்பரிய உடையான சேலையுடன் டிக்டாக்கில் தோன்றி தாயும் பிள்ளையுமாக நடிப்புத்திறமையை வெளிக்காட்டுவது வழக்கம்.
இருவருக்கும் திருமணமான நிலையில் டிக்டாக் செயலிக்கு அடிமையானதால் அவ்வப்போது ஆன்மீகம், நையாண்டி, நகைச்சுவை போன்ற வீடியோக்களையும் டிக்டாக் செயலியில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மீனாட்சிக்கு டிக்டாக் மூலம் தேனியைச் சேர்ந்த சுகந்தி என்ற பெண்ணின் நட்பு கிடைத்துள்ளது. அந்த பெண் ஒருபடி மேலே போய், லைக்கிற்காக தனது ஆண் நண்பருடன் செய்யும் காதல் சேட்டைகளை எல்லாம் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் சுகந்திக்கும் மீனாட்சிக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு டிக்டாக் செயலியில் நட்பை துண்டித்து கொண்டனர்.
மீனாட்சியுடனான நட்பு துண்டானதும் ஆத்திரம் அடைந்த சுகந்தி, தனது ஆண் நண்பர் செல்வா என்பவருடன் சேர்ந்து மீனாட்சி மற்றும் தோழி கயல் ஆகியோரின் டிக்டாக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து, இருவரையும் விலை மாதர்களாக சித்தரித்து டிக்டாக் செயலியில் பதிவிட்டதால் இருவரது குடும்பத்திலும் புயல்வீசத் தொடங்கியது. கயலின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் வீட்டைவிட்டு துரத்தியதால் தற்போது காப்பகத்தில் தவித்து வருகிறார்.
மீனாட்சி ஒத்தக்கடை காவல்நிலையத்திலும், கயல் மதுரை மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்துள்ள நிலையில், தேனியைச் சேர்ந்த சுகந்தி மற்றும் மதுரை செல்வா ஆகியோர் மீது ஒத்தக்கடை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
தன் மீது அவதூறு பரப்பியதாக மீனாட்சி மற்றும் கயல் மீது சுகந்தியும் போட்டிக்கு புகார் அளித்துள்ளதால், வழக்கை விசாரிக்கும் போலீசார் என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க முன்ஜாமீன் பெற்ற சுகந்தியிடம் இரு செல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், டிக்டாக், வாட்ஸ் ஆப், முகனூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒருவருடம் கருத்து பதிவிட தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியை சேர்ந்த சுகந்தியின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி வரும் நிலையில், சுகந்தியோ ஆண் நண்பருடன் டிக்டாக் செய்து பொழுதைக் கழிப்பதை பரந்த மனதுடன் ஒப்புக்கொண்டார்.
மீனாட்சி, கயல் ஆகியோருடன், தான் டிக்டாக்கில் தோழியாக இருந்ததாகக் கூறிய சுகந்தி, இருவரது நடவடிக்கையும் பிடிக்காததால் விலகத் தொடங்கியதாகவும், அதன் பின்னரும் அவர்கள் கூலிக்கு ஆள் வைத்து தன்னிடம் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.
இந்த நிலையில், டிக்டாக்கில் போலி முகவரியில் வந்து தங்களை விமர்சித்த சுகந்தியின் நண்பரான நெல்லை இளைஞரை தேடிச்சென்று தனது தோழிகளுடன் சேர்ந்து வீதியில் விட்டு விளாசியிருக்கிறார் மீனாட்சி..!
குடும்பப் பெண்கள் பலர் பொழுதுபோக்கு என்ற பெயரில் முழுநேர டிக்டாக் அடிமைகளாகி “லைக்“களுக்கு ஆசைப்பட்டு “லைஃப்”பை தொலைத்து வருகின்றனர் என்பதே கசப்பான உண்மை..!
தேனி மாவட்டம் போடியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் காரில் ஆயுதங்களுடன் சுற்றிய கூலிப்படை கும்பல் ஒன்றை சுற்றிவளைத்தது போலீஸ்..! அவர்களிடம் நடத்திய விசாரணையில் முகநூலில் ஒரு பெண்ணை காதலித்து விட்டு ஏமாற்றிய இளைஞரை தூக்குவதற்காக சுற்றுவதாக தெரிவித்து அதிரவைத்தனர்.
தேனி மாவட்டம் காட்டு நாயக்கன் பட்டியை சேர்ந்த மென்பொறியாளரான அசோக்குமார். முகநூல் மூலம் தோழியாக அறிமுகமான மலேசியாவை சேர்ந்த அமுதா அருணாச்சலம் என்பவரை காதலித்துள்ளார்.
சில மாதங்களாக தனது காதலியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை மட்டுமே பார்த்து உருகி உருகி காதலித்த அசோக்குமார், தனது காதலியை பார்க்கத் துடிக்க அந்த பெண்ணே நேரில் வருவதாக கூறியிருக்கிறார். அதன்படி இரு மாதங்களுக்கு முன்பு தேனிக்கு வந்துள்ளார் அந்த பெண். காதலியை பார்க்க போகிறோம் என்ற ஆசையில் சினிமா நாயகன் போல புறப்பட்டு சென்றுள்ளார் அசோக்குமார். முகநூலில் போட்டோஷாப் செய்த புகைப்படங்களை பார்த்து அழகில் மயங்கிய அசோக்குமார், முதல் முறையாக போட்டோஷாப் செய்யாத தனது காதலி முகத்தை நேரடியாக பார்த்ததும் அதிர்ந்து போய்விட்டார்.
அந்தப்பெண் குண்டாக இருப்பதால் பிடிக்கவில்லை என்று கூறி நழுவப்பார்த்தார் காதலன் அசோக்குமார்.
ஆனால் அழகையோ, வசதியையோ எதிர்பார்க்காமல் நல்ல மனதை மட்டும் பார்த்து மலேசியாவில் இருந்து கழுத்து நிறைய தங்க நகைகளுடன் கடல் கடந்து பறந்து வந்த அந்த பெண்ணோ, அடைந்தால் அசோக்குமார் என்பதில் உறுதியாக இருந்தார்.
இருந்தாலும் தனது முயற்சியில் பின் வாங்காத அந்த பெண்ணோ அசோக்குமாரின் வீட்டுக்கே சென்று மாப்பிள்ளை கேட்டுள்ளார்.
அசோக்குமாரின் பெற்றோர் சம்மதிக்கவில்லை. இதையடுத்து இங்கேயே தற்கொலை செய்து கொள்வேன் என்று அடம்பிடித்ததால் மலேசியா பெண் மீது அசோக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அந்த பெண்ணின் உண்மையான பெயர் விக்னேஸ்வரி என்பதும் அவர் அசோக்குமாரைவிட10 வயது மூத்தவர் என்பதும் தெரியவந்தது. அத்தோடில்லாமல் அசோக்குமாருடன் விஜி, அமுதா, கனகா, வசந்தி, கவிதா அருணாச்சலம், பவித்ரா என போலியான கணக்குகளில் முகநூலில் சாட்டிங் செய்து கொண்டிருப்பதும் விக்னேஸ்வரி தான் என்பதும் தெரியவந்தது.
மலேசிய பெண் என்பதால் வழக்கம் போல பஞ்சாயத்து பேசி போலீசார் அவரவர் வீட்டுக்கு செல்லும்படி அனுப்பி வைத்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த மலேசிய பெண், அசோக் குமார் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக வீரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஏற்கனவே தேனி மகளிர் போலிசார் கைவிட்ட புகார் என்பதை தெரிந்து கொண்ட வீரபாண்டி போலீசாரும் முக நூல் காதல் ஜோடி இருவரையும் சமாதானமாக போகும்படி விரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் அசோக்குமார் ஆளைவிட்டால் போதும் என்று தப்பித்து முகனூல் கணக்கையே முடக்கிவிட்டு சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனம் ஒன்றிற்கு பணிக்கு வந்து விட்டார். இந்த நிலையில், அசோக்குமாரை தேடி தேனியில் ஆட்டோவில் சுற்றிய போது ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் விக்னேசுவரிக்கு மதுரை கூலிப்படை தலைவன் அன்பரசுவின் தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறான்.
இதையடுத்து அசோக்குமாரை தூக்கி வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவைக்க வேண்டும், இல்லையென்றால் அவர் கதையை முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டு கூலிப்படையினருக்கு விக்னேஸ்வரி ஒரு லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகின்றது.
அதன்படி வார இறுதி நாளில் விடுமுறைக்கு வீட்டிற்கு வரும் அசோக்குமாரை தூக்கி செல்லும் திட்டத்துடன் சுற்றிய போது தான் இந்த கூலிப்படை கும்பல் போலீசிடம் சிக்கி இருக்கின்றது. சரியான நேரத்தில் போலீசார் இந்த கும்பலை சுற்றி வளைத்திருக்காவிட்டால் சனிக்கிழமை ஊருக்கு வரும் அசோக்குமார் உயிருக்கு ஆபத்தாயிருக்கும் என்கின்றனர் போலீசார். கூலிப்படையை ஏவிய விக்னேஸ்வரியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
வாழ்க்கையை பொழுதுபோக்காகி பொறுப்பில்லாமல், சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடந்தால், காதலிக்க பெண் மட்டுமல்ல, கதையை முடிக்க வில்லங்கமும் அங்கிருந்து தான் கிளம்பி வரும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த சம்பவம்..!
- நமது நிருபர்