400க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை.. மீனவர்களின் எதிர்காலம்..?
கச்சத்தீவு விவகாரம் குறித்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுமற்றும் மீனவர் சார்ந்த வழக்கில் தீர்ப்பாக வழங்கியிருக்கிறது. இந்த நிலையில் நமக்கு தீர்வு வேண்டும்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் கட்சத்தீவின் அருகில் மீன்பிடிக்கச் செல்வதும் அங்கிருக்க கூடிய எல்லைகளை அறியாமல் மீறுவதும் அதற்காக இலங்கை கடற்படையினர் அவர்களை பிடித்து சிறையில் வைப்பதும் தொடர்ந்து வாடிக்கையாகி வருகிறது. இதற்கான காரணத்தை நாம் முறையாக பார்க்க வேண்டுமெனில் அதன் வரலாற்றை நோக்கி திரும்ப வேண்டும்.
கச்சத்தீவு ஒப்பந்தம் சட்ட ஏற்பு பெற வேண்டுமானால் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 368 இன்படி, அரசமைப்புச் சட்டப் பிரிவு 1 இல் சட்ட திருத்தம் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அக்கால மத்திய அரசு அவ்வாறு மேற்கொள்ளவில்லை. மேலும் இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 3 இன் படி மாநில எல்லைகளை மாற்றம் பற்றி செய்யப்படும் சாதாரணச் சட்டம்கூட நாடாளுமன்றத்தில் ஒப்புதல் இல்லை. கடந்த 1974 -76 கச்சத்தீவு ஒப்பந்தங்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி கடல் எல்லை குறித்த பன்னாட்டுச் சட்டங்களுக்கும் எதிரானது. “பாக் நீரிணைக்கும் ஆதம் பாலத்திற்கும் இடையே உள்ள இலங்கை – இந்திய வரலாற்று நீர் எல்லையை வரையறுக்கும் ஒப்பந்தம்” என்று சட்டச் சொற்களில் குறிக்கப்படும் கச்சத்தீவு ஒப்பந்தம் கையெழுத்தாகிய போது 1958 ஆம் ஆண்டு ஐ.நா. சட்டம் செயலில் இருந்தது. ‘கடல் பரப்பு குறித்த ஐக்கிய நாடுகள் அவை ஒப்பந்தம், 1958’ (1958 ஹிழி நீஷீஸீஸ்மீஸீtவீஷீஸீ ஷீஸீ நீஷீஸீtவீஸீமீஸீtணீறீ sலீமீறீயீ) இரண்டு நாடுகளுக்கிடையில் கடல் எல்லையை பிரித்துக் கொள்ளும் போது கடை பிடிக்க வேண்டிய விதிமுறையையும் கூறுகிறது. இரண்டு அண்டைநாடுகள் தங்களுக்கிடையிலுள்ள கடல் எல்லையை வரையறுக்கும் போது தங்களுக்கிடையே இருக்கிற கடல் பரப்பை சரியாக பாதி பாதியாக பிரித்துக் கொள்ள வேண்டும். இரண்டு கடற்கரையிலிருந்தும் சம தொலைவில் இந்த எல்லைக் கோடு கிழிக்கப்பட வேண்டும். இதற்கு மாறாக எல்லை வரையறுப்பில் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் அவ்வொப்பந்தத்தில் அதற்கான சிறப்புக் காரணங்கள் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். 1974 ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு (1958 UN convention on continental shelf) பின்பற்றப்படவில்லை.
இராமேசுவரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையில் உள்ள தொலைவு 30 கடல் மைல். சமதொலைவில் எல்லைக் கோடு வகுப்பதென்றால் 15 மைலில் அக்கோடு வரையறுக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வரையறுக்கப்பட்டிருந்தால் கச்சத்தீவு இந்திய எல்லைக்குட்பட்டதாகவே நீடித்து இருக்கும். ஏனெனில் கச்சத்தீவு இராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும் தலைமன்னாரிலிருந்து 18 மைல் தொலைவிலும் உள்ளது. இவ்வொப்பந்த்த்தில் வேண்டுமென்றே சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டுள்ளது
ஆனால் 1974 –ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தத்தில் சமதொலைவுக் கோட்பாடு மீறப்பட்டு 10 மைலுக்கு 20 மைல் என்று பிரிக்கப்பட்டிருக்கிறது. கச்சத்தீவை இலங்கையிடம் அளித்துவிட வேண்டும் என்ற நோக்கம் தவிர இந்தப் பிறழ்ச்சிக்கு வேறு காரணம் எதுவும் இல்லை. 1958ஆம் ஆண்டு ஐ.நா. சட்டப்படி இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் இருந்தால் அதனை ஒப்பந்தத்தில் எடுத்துரைத்து நிலைநாட்டியிருக்க வேண்டும். 1974 இந்திராகாந்தி – சிறீமாவோ ஒப்பந்தத்தில் அவ்வாறான சிறப்புக் காரணம் எதும் சொல்லப்பட வில்லை.
அதன் அடிப்படையில் சிங்கள கடற்படை வீரர்கள் தமிழக மீனவர்களுக்கு தரும் தொல்லை சொல்லில் வடிக்க இயலாத துன்பமாய் மாறி வருகிறது. 400க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள கப்பற்படையால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 2013 ஆம் வருடத்தில் மட்டும் 111 தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 2023ல் இப்போதும் கூட 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு இன்றைய நாடாளுமன்ற உள்ளாட்சித் துறையின் வேண்டுகோளின் படி விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்வதும் விடுவிப்பதும் ஆக இந்த துயரம் நீடிக்கிறது.
இப்படியாக இந்திரா அம்மையார் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என இக்காலத்திய தீர்ப்பிலும் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையில் முதற் கோணல் முற்றும் கோணலாகி தமிழக மீனவர்களின் எதிர்காலம் தொடர்ந்து கேள்விக்குறியாகி வருகிறது.
தொடரும் இந்த இக்கட்டில் தமிழ்நாட்டு அரசின் நிலைப்பாடு என்ன? தேர்தல்கால கூட்டணி கட்சிக் கொள்கைகள் இவையெல்லாம் நமது மாநில மற்றும் கடல் எல்லைகளைத் தீர்த்து வைக்குமா?
தன்னைச்சுற்றி எதுவுமே தெரியாத இந்த பின்னணிகள் ஏதும் அற்ற சந்தர்ப்பவாதிகள் கச்சத்தீவு தமிழக மீனவர் படுகொலைகள் பற்றி எல்லாம் எங்கே போய் பேசப்போகிறார்கள்.
– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்