புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கிய அதிகாரிகள்.! தாலுகா அலுவலகத்தில் சமையல் செய்த குடியிருப்புவாசிகள்.
புறம்போக்கு நிலத்தை தனியார் சபைக்கு அதிகாரிகள் பட்டா போட்டு கொடுத்ததால், 85 ஆண்டுகளாக அவ்விடத்தில் குடியிருந்தவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் சமைத்து உண்ணும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 18 வது வார்டு புறம்போக்கு நிலத்தில் கிருஷ்ணவேணி, ராக்கம்மாள் ஆகிய இரு குடும்பங்கள் கடந்த 85 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பெயரில் வீட்டு வரி, மின்சார வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை அரசாங்கத்திற்கு செலுத்தப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் வசித்து வரும் இடங்கள் பரமக்குடி ஆயிர வைசிய சபைக்கு பாத்தியப்பட்டது என பரமக்குடி உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனையடுத்து இன்று இரு குடும்பங்களையும் போலீசார் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார். புறம்போக்கு நிலத்திற்கு போலியான ஆவணங்களை தயாரித்து அரசு அதிகாரிகள் உடந்தையுடன் புறம்போக்கு நிலம் முறைகேடாக 1995 ஆம் ஆண்டு தனிநபருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இன்றி இரு குடும்பங்களை அதிகாரிகள் வெளியேற்றி உள்ளனர்.
இதனை கண்டித்தும், மாற்று இடம் வழங்கக் கோரியும் இரு குடும்பங்களை சேர்ந்த 13 நபர்கள் பரமக்குடி தாலுகா அலுவலகத்தில் சமைத்து சாப்பிட்டு தங்கி உள்ளனர். அதிகாரிகள் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் வரவில்லை. அரசு புறம்போக்கு நிலத்தில் 85 ஆண்டுகளாக குடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதால் பாதிக்கப்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் சமைத்து உண்டு வருகின்றனர்.