கலைத்துறையிலும் கலக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி ஐஏஎஸ்
சென்னை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றிருக்கிறார் விஜயராணி ஐஏஎஸ். இவர் ஐஏஎஸ் அதிகாரி மட்டுமல்ல, சிறந்த மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பிறருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம் கொண்டவர், கவிஞர் என பண்முகத் தன்மை கொண்டவர். அரசுப் பணியில் கண்டிப்புடனும், பணியாளர்களிடத்தில் கனிவுடன் நடப்பவர்.
இன்று மேடைப் பேச்சாளர்களில் பெரும்பாலனவர்கள் பேசும் போது தன்னை அறியாமலேயே, தனது பேச்சின் போது ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசும் பழக்கம் உடையவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் விஜயராணி ஐஏஎஸ் மேடைகளில் பேசும் போது தமிழின் மீது உள்ள தீராத பற்றால் ஆங்கில வார்த்தைகள் கலந்து விடாமல் மிகவும் ஜாக்கிரதையாக பேசக்கூடியவர். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடையவர்.
உற்றுயிர்த்துத் தேடலாகி, வனமாய் நீ! மழையாய் நான்! என்ற இரண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார். சர்வதேச புத்தக கண்காட்சியில் இவரது புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. ஐந்து மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். முனைவர் பட்டம் பெற்றவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி என எவ்வளவோ உயர்ந்த இடங்களுக்குச் சென்றாலும், கலைத்துறையில் இவரது தேடல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
சென்னை மாவட்ட ஆட்சியராக தனது சிறப்பான பணிகளைத் தொடர நமது இதழின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
– சூரிகா