தாக்கப்படும் அதிகாரிகள்.. தொடரும் மணல் திருட்டு…
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே அதிகாலை மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே குதிரைமொழி பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலாடி துணை தாசில்தார் செந்தில்வேல் முருகன், அதிகாலை 5 மணியளவில் குதிரைமொழி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை அவர் வழிமறித்தார். ஆத்திரம் அடைந்த மணல் கும்பல், டிராக்டரை நிறுத்தாமல் அதிவேகத்தில் செந்தில்வேல் முருகனை நோக்கி வந்தது. சுதாரித்துக் கொண்ட அவர் விலகி ஓடி தப்பினார்.
தொடர்ந்து டிராக்டர் அங்கே இருந்த பனைமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. டிராக்டரை ஓட்டி வந்த டிரைவர் உள்பட கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து துணை தாசில்தார் சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, மேல்நடவடிக்கைக்காக பரமக்குடி உதவி கலெக்டரிடம் டிராக்டரை ஒப்படைத்தனர். மணல் திருட்டை தடுத்த துணை தாசில்தார் மீது டிராக்டர் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே சிலநாட்களுக்கு முன் சாயல்குடி அருகே எம்.கரிசல்குளத்தையடுத்துள்ள மணிவலை கிராமப் பகுதியில் இருந்து சட்ட விரோதமாக திருட்டு மணல் அள்ளப்படுவதாக கடலாடி வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு வட்டாட்சியர் முத்துலட்சுமி அப்பகுதியில் ரோந்து சென்றார். அப்போது மணல் அள்ளி வந்த டிராக்டரை நிறுத்தினார். ஆனால் சற்றும் எதிர்பாராத நேரத்தில் வட்டாட்சியரின் அரசு வாகனத்தின் மீது மணல் ஏற்றி வந்த டிராக்டர் மோதிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. இதில் அரசு வாகனத்தின் முன் பகுதி சேதமானது.
இது தொடர்பாக வட்டாட்சியர் முத்துலட்சுமி புகாரின் பேரில் மணல் அள்ளிய கும்பல் விட்டுச்சென்ற இரு சக்கர வாகனம், மண்வெட்டிகளை சாயல்குடி போலீசார் கைப்பற்றினர். தப்பிச்சென்ற மணல் திருட்டு கும்பலை சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஜோக்கிம் ஜெரி, எஸ்.ஐ.,&க்கள் சாரதா, விஜயபாஸ்கர் ஆகியோர் தேடி வருவதாக கூறுகின்றனர். மணல் கடத்தலை தடுக்கும் நடவடிக்கையில் துரிதமாக செயல்படும் வட்டாட்சியர் முத்துலட்சுமிக்கு அவர் பணியில் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்கள் தொடர்வதாக வருவாய் துறை ஊழியர்களிடம் வேதனை தெரிவித்து வருகிறார்.
இவ்வாறு தொடர்ந்து வட்டாட்சியரும், துணை வட்டாட்சியரும் திருட்டு மணல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியரும், பரமக்குடி துணை ஆட்சியரும் இதுசம்பந்தமாக திருட்டு மணல் அள்ளியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்.. அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறதா.. என்ற கேள்வியும் பெரும்பாலான பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கனிம வளத்தையும், நீராதாரத்தையும் பாதுகாத்து மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்..