கடன் தருவதாக மோசடி! : போலி பைனான்சியர் மீண்டும் கைது !
கோவை கணபதி ராஜீவ் காந்தி ரோடு ஆறுபுளிய மரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுத்தேவர் மகன் குணசேகரன் (65). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கோவை மட்டுமின்றி தமிழகம் முழு வதும் கடன் வாங்கி தருவதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை தொடர்ந்து ஏமாற்றியதாக இவர் மீது ஏற்கனவே கோவை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனிலும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்கு தொடர் பாக ஆதிகணேசன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனாலும் குணசேகரனிடம் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர். கடந்த மாதத்தில் கோவை புலியகுளம் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் என்பவரிடம் இடம் வாங்கித் தருவதாகக் கூறி 7 லட்சம் ரூபாயை ஏமாற்றி பின்னர் பணத்தை திருப்பி தர மறுத் ததுடன் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குணசேகரன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சரவணம்பட்டி அடுத்த எல்ஜிபி நகர் பகுதியைச் சேர்ந்த சன்னாசி என்பவரின் மனைவி ஈஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குணசேகரனிடம் கடன் கேட்டு சென்றுள்ளார். அப்போது குணசேகரன் ஒரு கோடி ரூபாய்க்கு மூன்று லட்சம் ரூபாய் முன்பணமாக தர வேண்டும் என்றும் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வந்துவிடும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய ஈஸ்வரி 15 லட்சம் ரூபாயை முன்பணமாக குணசேகரனிடம் கொடுத்துள்ளார். அவர் கூறியது போல பணம் எதையும் கடனாக குணசேகரன் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஏதேனும் காரணங்கள் சாக்குபோக்கு சொல்லிக்கொண்டே நாட்களை கடத்தி வந்தது ஈஸ்வரிக்கு தெரியவந்தது. மேலும் குணசேகரன் இப்படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நபர்களை ஏமாற்றிய விபரம் ஈஸ்வரிக்கு தெரியவந்ததையடுத்து தான் கொடுத்த 15 லட்ச ரூபாயை திருப்பிக் கேட்டு குணசேகரனை அவரது வீட்டில் சென்று சந்தித்து தான் கொடுத்த பணத்தைக் கேட்டிருக்கிறார். பணத்தை கொடுக்க முடியாது என்று கூறிய குணசேகரன் ஈஸ்வரியை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனால் பயந்து போன ஈஸ்வரி சரவணம்பட்டி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சரவணம்பட்டி இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்தார். போலீசார் குணசேரனைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே 20 ஆயிரம் ரூபாய் கடன் தொகையில், ரூபாய் 10 ஆயிரம் திருப்பிக்கொடுத்ததாக கூறப்படும் நிலையில், முழுப்பணத்தையும் திருப்பிக்கேட்டு, கடன் வாங்கியவரை பைனான்சியர், மிரட்டுவது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.
மூங்கிலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். 58 வயதாகும் இவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு சின்னதள்ளபாடி கிராமத்தைச் சேர்ந்த வேலாயுதம் என்பவரிடம் ரூபாய் 20 ஆயிரம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இதில் செல்வராஜ் 10 ஆயிரம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்தியதாகவும், ஆனால் அதை வட்டிப்பணம் என்று கூறிய வேலாயுதம் முழுப்பணத்தையும் திருப்பிகேட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் அங்குள்ள டீக்கடையில் செல்வராஜை பைனான்சியர் வேலாயுதம், 20 ஆயிரம் ரூபாய் பணத்தைகேட்டு அவதூறாக பேசி மிரட்டுவதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
- முத்துப்பாண்டி