பிரபல ரேஷன் அரிசி கடத்தல் மன்னனிடம், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ! குண்டர் சட்டத்தில் கைது செய்த போலீசார் !
ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்கும் நோக்கில், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார், தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இலவசமாக தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை, ரேஷன்கடை விற்பனையாளர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி, வெளிமாநிலங்களுக்கு கொண்டுசென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை, தமிழகம் முழுவதும் தொழிலாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை வடக்கு பிரிவு, குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் தாம்சன் சேவியர் தலைமையில், நடைபெற்ற சோதனையில் 5 டன் ரேஷன் அரிசியை, திருவள்ளூர் மாவட்டம், ரெட் ஹில்ஸ் ஆட்டந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் மகன் பிரேம்குமார் வேனில் கடத்தி வந்துள்ளார். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், வாகனத்தை விரட்டிக் பிடித்து சோதனை செய்ததில் 5 டன்னுக்கும் மேலாக ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்துள்ளது. பின்னர் ரேஷன் அரிசியை கடத்தி வந்த பிரேம்குமார கைது செய்ததோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிரேம்குமார் பல ஆண்டுகளாக ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு, போலீசாருக்கு ஆட்டம் காட்டி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு இந்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றதும், பிரேம்குமார் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்துவோர் மற்றும் பதுக்குவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-கே.எம்.எஸ்