சீறிப்பாயும் காளையரா… சசிகுமார் ?.! “காரி” திரைவிமர்சனம் – 4/5
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நாயகனாகவும், பார்வதி அருண் நாயகியாக நடித்து வெளிவந்துள்ள படம் “காரி”.
இராமநாதபுரம் மாவட்டத்தில் காரியூர், சிவனேந்தல் பகுதியில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை திரைக்கதை அமைத்து, அந்த கிராமங்களையே திரைக்களமாக பயன்படுத்தி தத்ரூபமாக காட்சிகளை படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வானம் பார்த்த பூமியான காரியூர், சிவனேந்தல் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் பொதுவான பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு முன்னூறு ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்த கோவில் நிர்வாகத்தை நிர்வகிப்பதில் இரண்டு கிராமத்தினரிடைய நீண்ட காலமாக பிரச்சினை நிலவுவதால் கோவில் திருவிழா நடைபெறாமல் போகிறது.
இரண்டு கிராமத்தினரும் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் திவான் தலைமையில் நடைபெற்ற ஊர் கூட்டத்தில், கோவில் திருவிழாவை இரண்டு கிராமத்தினரும் சேர்ந்து நடத்துவது எனவும், திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தி பதினெட்டு வகையான காளைகளை சித்தனேந்தல் கிராமத்தினர் இறக்க, காரியூர் கிராமத்தினர் பதினெட்டுப் பேர் காளைகளை அடக்க வேண்டும். போட்டியில் ஜெயிப்பவர்கள் கோவில் நிர்வாகத்தை நிர்வகிக்கலாம் என முடிவு செய்யப்படுகிறது.
காரியூரைச் சேர்ந்த பெரிய தலக்கட்டு குடும்பத்தைச் சேர்ந்த சசிகுமாரின் தந்தை சென்னையில் குதிரைப் பந்தயத்திற்கு குதிரைகளை தயார்படுத்தும் பணிகளை செய்து வருகிறார். சசிகுமார் குதிரை ஜாக்கியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஊர் திருவிழா நடத்துவது சம்பந்தமாக சசிகுமாரின் தந்தையிடம் பேசுவதற்காக கிராமத்திலிருந்து உறவினர்கள் வருகிறார்கள். அந்த சமயத்தில் சசிகுமாரின் தந்தை இறந்து போகிறார்.
பின்னர் நகர அவர்களுடன் கிராமத்திற்கு செல்கிறார். நகர வாழ்க்கை வாழ்ந்து வந்த சசிகுமார் அங்கே தனது பூர்வீக வீட்டையும், சொந்த பந்தங்களின் வாழ்வியல் முறையை பார்த்ததும் அவர்களுடனே ஒன்றிப் போகிறார். திருவிழா நடத்துவதற்கு அதிகாரிகள் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கிறார்கள். கோவில் திருவிழா நிடைபெற்றதா? ஜல்லிக்கட்டு போட்டியில் குதிரை ஜாக்கியான சசிகுமார் கலந்து கொண்டாரா? கோவில் நிர்வாகம் எந்த கிராமத்திற்குச் சென்றது ? என்பது மீதிக்கதை…..
அறிமுக நாயகி பார்வதி அருண், அவரது தந்தையாக பாலாஜி சக்திவேல் இருவரும் சேது சீமையின் மண் மனம் மாறாமல், தந்தை, மகளாக வாழ்ந்திருக்கிறார்கள். தனது தந்தை தான் வளர்த்த காளையை விற்றுவிட்டார் என தெரிந்ததும், மனமுடைந்து புழுதி மனலில் உருண்டு அழும் காட்சியில் படம் பார்க்கும் அனைவரையும் கண்களங்க வைத்துள்ளார்.
வானம் பார்த்த பூமியாக இருக்கும் இராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களுக்கிடையே நடைபெறும் பிரச்சினைகளை தத்ரூபமாக காட்சிப்படுத்தியதோடு, அந்த மக்களின் வாழ்வியலை எதார்த்தமாக திரைக்கதையில் சொல்லிய இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
சசிகுமாரின் நடிப்பை சொல்ல வேண்டியதில்லை. இந்தப் படத்தில் கதையோடு, கதைக் களத்தில் ஒன்றிப் போகிறார். சீறிப்பாயும் காளையராக சசிகுமார் வாழ்ந்திருக்கிறார்.