கார்ப்பரேட் நிறுவனங்களின் அட்டூழியம்.!.? துணை போகும் அரசு ! “கலகத் தலைவன்” விமர்சனம்
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் கார்பரேட் நிறுவன முதலாளிகளின் அரசியலை அற்புதமான திரைக்கதையில் ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள திரைப்படம் “கலகத் தலைவன்”
வஜ்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில் புதிய வகை கனரக வாகனத்தை உற்பத்தி செய்கிறது. அந்த வாகனம் விற்பனைக்கு வருவதற்கு முன்பே, அந்த வாகனம் வெளியிடும் புகையால் காற்று மாசு அதிகம் உருவாகும் என்பது தெரியவருகிறது. இதனால் அரசின் அனுமதி கிடைப்பது கடினம் என்பதால், அதனை மறைக்க அந்த நிறுவனத்தின் உரிமையாளர் முயற்சிக்கிறார். ஆனாலும் விஷயம் வெளியே கசிந்து செய்தியாக வெளியாகிறது. இதனால் உற்பத்தி நிறுத்தப்பட்டு பல கோடி நஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகிறது.
இதனால் கோபமடைந்த வஜ்ரா நிறுவனத்தின் உரிமையாளர், இந்த நிறுவனத்தின் ரகசியம் எப்படி வெளியே கசிந்தது, இங்கு வேலை பார்க்கும் யாரோ தான் ரகசியத்தை பணத்திற்காக வெளியே விற்றிருக்கிறார்கள். அவர்களை உடனடியாக கண்டறிந்து அழிக்கவும், அவர்கள் சம்மந்தமான விரிவான அறிக்கை கொடுக்குமாறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேலை பார்க்கும் முன்னாள் இராணுவ அதிகாரியான ஆரவ் நியமிக்கப்படுகிறார்.
அந்த நிறுவனத்தின் பல மட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை துன்புறுத்தி, கொடூரமான முறையில் விசாரணை செய்து வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்கள் எங்கிருந்து கசிந்தது என அவ்வப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்து வருகிறார். இறுதியாக இதற்கெல்லாம் காரணம் உதயநிதி தான் என கண்டறிந்து அவரைத் தேடுகிறார்.
உதயநிதி ஏன் வஜ்ரா நிறுவனத்தின் ரகசியங்களை வெளியிடுகிறார் ? அதன் பின்னனி என்ன ? ஆரவின் வெறித்தனமான தேடுதல் வேட்டையில் உதயநிதி சிக்கினாரா ? தப்பித்தாரா ? என்பது மீதிக்கதை…..
அரசாங்கத்துடன் கைகோர்த்து கார்பரேட் நிறுவனங்கள் செய்யும் அத்துமீறல்கள், அட்டூழியங்களால் சாமானிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அற்புதமான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர். உதயநிதி கதைக்கு தகுந்தாற்போல் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி நிதி அகர்வாலுக்கு இந்தப் படத்திற்கு பிறகு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. நன்றாக நடித்திருக்கிறார்.